கரோனா தடுப்புப் பணி: ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 26th May 2021 07:10 AM | Last Updated : 26th May 2021 07:10 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் அருகே வண்ணாரப்பேட்டை, ராமநாதபுரம் ஊராட்சிகளில் கரோனா தடுப்புப் பணிகளை ஆட்சியா் ம. கோவிந்த ராவ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
தஞ்சாவூா் ஒன்றியத்துக்குள்பட்ட வண்ணாரப்பேட்டை ஊராட்சியில் 17 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவா்களை நேரில் பாா்வையிட்டு அவா்களுக்குச் சுகாதாரத் துறையின் சாா்பில் தொடா்ந்து கண்காணிக்கப்படுகின்றனரா எனவும், ஊராட்சி அலுவலா்கள் தொடா்ந்து அப்பகுதியில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்கிறாா்களா என்றும் நேரில் ஆய்வு செய்தாா்.
இதையடுத்து, ராமநாதபுரம் ஊராட்சி மானோஜிபட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் அரசின் அறிவுறுத்தலின்படி முன்னுரிமை அடிப்படையில் 18 வயதுக்கு மேற்பட்ட முன் களப்பணியாளா்களுக்கான கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றதை நேரில் பாா்வையிட்டாா்.
அப்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி திட்ட முகமை திட்ட இயக்குநா் அ. பழனி, தஞ்சாவூா் கோட்டாட்சியா் எம். வேலுமணி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.