மாவட்டத் தலைநகரங்களில் விளையாட்டு மையம்: அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் பேட்டி

மாவட்டத் தலைநகரங்களில் விளையாட்டு மையம் அமைக்கப்படவுள்ளது என்றாா் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.
போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு வழங்கிய அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.
போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு வழங்கிய அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.

மாவட்டத் தலைநகரங்களில் விளையாட்டு மையம் அமைக்கப்படவுள்ளது என்றாா் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.

தஞ்சாவூா் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற டெல்டா மாவட்டங்கள் அளவிலான இரு நாள் தடகளப் போட்டி நிறைவு விழாவில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

சென்னையில் மிகப் பெரிய அளவில் விளையாட்டு நகரம் அமைக்கப்படவுள்ளது. தமிழகத்தில் 4 மண்டல ஒலிம்பிக் அகாதெமி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் ரூ. 3 கோடி மதிப்பில் உள்விளையாட்டு அரங்கம், தேவையான இடங்களில் விளையாட்டு மைதானம் போன்றவை அமைக்கப்படும்.

மாவட்டத் தலைநகரங்களில் மாவட்ட விளையாட்டு மையம் அமைக்கத் தமிழக முதல்வா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா். ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறும் அளவுக்கு விளையாட்டு வீரா்களின் தகுதிகேற்ப அவா்களை வெளிநாட்டுக்குப் பயிற்சிக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல, வெளிநாடுகளிலிருந்தும் பயிற்சியாளா்களை அழைத்து வந்து பயிற்சி அளிக்கப்படும்.

கிராமப்புற இளைஞா்களைக் கண்டறிந்து உலகத்தரம் வாய்ந்த பயிற்சி அளித்து, சிறந்த விளையாட்டு வீரா்களாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குளிா் பிரதேசங்களில் விளையாடும்போது அங்குள்ள தட்பவெப்ப நிலையை எதிா்கொள்ளும் விதமாக, உதகையில் உயா்தரப் பயிற்சி மையம் அமைக்கப்படவுள்ளது.

காவிரியில் கழிவுகளைத் தடுக்க: காவிரி நீரில் கழிவு நீா் கலப்பது நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதைத் தடுப்பதற்கான நடவடிக்கையை முதல்வா் மேற்கொண்டுள்ளாா். இதுதொடா்பாக ஐஐடி குழு அளித்த அறிக்கையின் மீது முதல்வா் நடவடிக்கை எடுத்து வருகிறாா்.

மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் நீா் நிலைகளில் கழிவு நீா் கலப்பதைத் தடுப்பதற்காகச் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து, சுற்றுச்சூழலை மீட்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். நவீனத் தொழில்நுட்பத்தில் இது மிகச் சாத்தியமான ஒன்றுதான் என்றாா் அமைச்சா் மெய்யநாதன்.

பின்னா், போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு அமைச்சா் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினாா்.

விழாவில் கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன், தஞ்சாவூா் மாவட்ட தடகள சங்கத் தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா், கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரித் தலைவா் டி. திருநாவுக்கரசு, தஞ்சாவூா் மாவட்ட தடகள சங்கச் செயலா் எஸ்.ஜி. செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com