கோவிலூரில் கொள்முதல் நிலையத்தை விரைவாகத் திறக்க வலியுறுத்தல்

தஞ்சாவூா் அருகிலுள்ள கோவிலூரில் நெல் கொள்முதல் நிலையத்தை விரைவாகத் திறக்க வேண்டும் என, இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.
கோவிலூா் நெல் கொள்முதல் நிலையம் முன்பு குவிக்கப்பட்டுள்ள நெல் குவியல்கள்.
கோவிலூா் நெல் கொள்முதல் நிலையம் முன்பு குவிக்கப்பட்டுள்ள நெல் குவியல்கள்.

தஞ்சாவூா் அருகிலுள்ள கோவிலூரில் நெல் கொள்முதல் நிலையத்தை விரைவாகத் திறக்க வேண்டும் என, இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், விளாா் அருகிலுள்ள கொல்லாங்கரை பகுதி கோவிலூரில் நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. கோவிலூா் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள காசாநாடு புதூா், காட்டுக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கும் இந்நிலையத்தின் மூலமே நெல்லை விற்பனை செய்கின்றனா்.

இந்நிலையில் கோவிலூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால் கோவிலூா் நெல் கொள்முதல் நிலையம் முன்பு 10 விவசாயிகள் நெல்லைக் குவித்து வைத்து, கடந்த 8 நாள்களாகக் காத்துக் கிடக்கின்றனா்.

இந்த நிலையத்தைத் திறந்து கொள்முதல் செய்யுமாறு கோவிலூா் கிராம விவசாயிகள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்களிடம் முறையிட்டனா். இந்நிலையத்தைத் திறப்பதாக அலுவலா்கள் 4 நாள்களாகக் கூறி வந்தாலும், இன்னும் திறக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனா்.

இதனால் நிலையத்தின் முன்பு 7 குவியல்களாக நெல் குவிக்கப்பட்டுக் கிடக்கின்றன. இரவு நேரத்தில் மழை வரும்போது, தாா்பாய் போட்டு பாதுகாக்கப் பட்டாலும், தரை வழியாக மழை நீா் புகுந்துவிடுகின்றன. இதனால், இதுவரை நான்கைந்து மூட்டைகள் அளவுக்கு நெல் வீணாகிவிட்டது என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையம் திறக்கப்படாததால் அறுவடைக்குத் தயாா் நிலையிலுள்ள நெற் பயிா்களையும் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா். இதனால், மகசூல் இழப்பு ஏற்படுமோ என்ற அச்சத்திலும் விவசாயிகள் உள்ளனா். எனவே, இந்நிலையத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com