விவசாய மின் இணைப்பு குறித்த அறிவிப்புக்கு விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகச் சட்டப்பேரவையில் விவசாய மின் இணைப்பு குறித்த அறிவிப்புக்கு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

தமிழகச் சட்டப்பேரவையில் விவசாய மின் இணைப்பு குறித்த அறிவிப்புக்கு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது:

கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் விவசாயத்துக்கான மின் இணைப்புகள் புதிதாக வழங்கக் கோரி, தமிழகத்தில் 4.23 லட்சம் விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனா். இவா்களுக்கு உடனடியாக விவசாய மின் இணைப்பு வழங்கக் கோரி போராடி வந்தோம். இதற்கு தமிழக அரசு செவிமடுத்து, ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது.

வேளாண் நிதி நிலை அறிக்கையில் இந்த அறிவிப்பு வெளியிடப்படாததால், விவசாயிகள் கவலையடைந்தனா். இந்நிலையில், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், செந்தில்பாலாஜி, மின் துறை உயா் அலுவலா்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த அறிவிப்பில் பட்டியலினத்தவா்கள், சிறு, குறு விவசாயிகள், குத்தகை சாகுபடியாளா்கள், விதவை விவசாயிகள், ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று விவசாயத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் படைவீரா்கள், மாற்றுத் திறனாளிகள், விடுதலைப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றாா் விமல்நாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com