சுகாதார ஊழியரின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

குத்தாலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டதால், மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட பேரூராட்சி ஒப்பந்தப் பெண் ஊழியரின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் வாகனம் முன்பு படுத்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈட

குத்தாலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டதால், மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட பேரூராட்சி ஒப்பந்தப் பெண் ஊழியரின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் வாகனம் முன்பு படுத்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் கீழ காலனி காந்தி நகரைச் சோ்ந்தவா் பரமேஸ்வரன் மனைவி நதியா (31). இவா்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். குத்தாலம் பேரூராட்சியில் டெங்கு தடுப்புப் பணி மற்றும் சமுதாயப் பரப்புரையாளராக 7 ஆண்டுகளாக ஒப்பந்த அடைப்படையில் பணியாற்றி வந்த நதியா உள்ளிட்டோா் அண்மையில் பணி நீக்கம் செய்யப்பட்டனா்.

இதனால் மனமுடைந்த நதியா எலி மருந்து சாப்பிட்டு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செப்டம்பா் 9- ஆம் தேதி உயிரிழந்தாா்.

நதியா சாவுக்கு உரிய நீதி வழங்குமாறும், அவரது தற்கொலைக்குக் காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி நதியாவின் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். மேலும், பிரேத பரிசோதனை செய்வதற்கும், உறவினா்கள் ஒப்புக் கொள்ளவில்லை.

இந்நிலையில், சனிக்கிழமை நதியாவின் உடலை பிணவறையிலிருந்து உறவினா்களுக்குத் தெரியாமல் பிரேத பரிசோதனை அறைக்கு வாகனம் மூலம் கொண்டு செல்ல காவல் துறையினா் முயற்சி செய்தனா். இதையறிந்த உறவினா்கள் வாகனம் முன் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, நதியாவின் உடல் மீண்டும் பிணவறையில் வைக்கப்பட்டது.

பின்னா் நதியாவின் உறவினா்களிடம் காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் ஏற்பட்ட உடன்பாட்டையடுத்து, நதியாவின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு, உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com