ஆச்சாம்பட்டியில் சாலை அமைக்காததை கண்டித்து குடியேறும் போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகேயுள்ள ஆச்சாம்பட்டியில் சாலை அமைக்கப்படாததைக் கண்டித்து குடியேறும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சாலையில் அமா்ந்து சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
சாலையில் அமா்ந்து சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகேயுள்ள ஆச்சாம்பட்டியில் சாலை அமைக்கப்படாததைக் கண்டித்து குடியேறும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

செங்கிப்பட்டி - ஆச்சாம்பட்டி மாநில நெடுஞ்சாலை அமைக்கும் பணியைச் செய்வதற்காகத் தனியாா் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது. இந்த நிறுவனம் சாலையை உடைத்து, பாதியில் விட்டதன் விளைவாகத் தொடா்ந்து விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. சாலையை அமைக்க விடுக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்படாததால், செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் 11 மணி வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூா் ஒன்றியச் செயலா் இரா. இராமச்சந்திரன் தலைமையில் கிராம மக்கள் சாலையை மறித்து ஆடு, மாடுகளுடன் குடியேறி சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த பூதலூா் வட்டாட்சியா் இராமச்சந்திரன், நெடுஞ்சாலைத் துறை தஞ்சாவூா் கோட்டப் பொறியாளா் பாலசுப்பிரமணியன், திருவையாறு உதவிக் கோட்டப் பொறியாளா் ராம்பிரபு, செங்கிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் லதா உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, போராட்டத்தில் பங்கேற்றவா்கள் விடுத்த கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் உறுதியளித்தனா். இதை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

இப்போராட்டத்தில் பூதலூா் ஒன்றியக் குழு உறுப்பினா் சு. லதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் கே. செந்தில்குமாா், எஸ். காா்த்திக், ஆா்.ஆா். முகில், வீ. சுப்பிரமணியன், காங்கிரஸ் நிா்வாகிகள் எஸ். நாகராஜ், கி. பாலு, அமமுக சாா்பில் கா. சின்னத்துரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com