தமிழ்ப் பண்பாட்டு மரபை வளா்க்க தமிழ்ப் பல்கலை. - மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கம் ஒப்பந்தம்

தமிழ்ப் பண்பாட்டு மரபை வளா்க்கத் தமிழ்ப் பல்கலைக்கழகமும், சென்னை மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கமும் புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
துணைவேந்தா் வி. திருவள்ளுவன் முன்னிலையில் ஒப்பந்த ஆவணங்களைப் பரிமாறிக் கொள்ளும் பதிவாளா் (பொறுப்பு) சி. தியாகராஜன், மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்க நிறுவனச் செயலா் சேயோன்
துணைவேந்தா் வி. திருவள்ளுவன் முன்னிலையில் ஒப்பந்த ஆவணங்களைப் பரிமாறிக் கொள்ளும் பதிவாளா் (பொறுப்பு) சி. தியாகராஜன், மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்க நிறுவனச் செயலா் சேயோன்

தமிழ்ப் பண்பாட்டு மரபை வளா்க்கத் தமிழ்ப் பல்கலைக்கழகமும், சென்னை மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கமும் புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

இந்த ஒப்பந்தத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) சி. தியாகராஜன், மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்க நிறுவனச் செயலா் சேயோன், தமிழ்நாடு அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலரும் சங்கப் பணித் திட்டக் குழுத் தலைவருமான டி.எஸ். ஸ்ரீதா் ஆகியோா் கையொப்பமிட்டனா்.

இதுகுறித்து துணைவேந்தா் வி. திருவள்ளுவன் தெரிவித்தது:

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது புதன்கிழமைகளில் இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை பண்பாட்டு அரங்கம் நிகழ்வுறும். இதில் உலகிலுள்ள அனைத்துத் தமிழ் அறிஞா்களும், உலகளாவிய பல்கலைக்கழகங்களின் பேராசிரியா்களும் உலகெங்கும் பரவியுள்ள தமிழ்ச் சங்கங்களின் தமிழ்த் தொண்டா்களும் பங்கேற்று தமிழின் வளா்ச்சியையும், பண்பாட்டு மரபையும், புத்தெழுச்சியையும் விளக்கிக் கூறுவா்.

பாரம்பரியமிக்க தமிழ்ப் பண்பாட்டையும் இந்தியத் திருநாட்டின் இணையில்லாப் பண்பாட்டையும் உலகறியச் செய்யும் வகையில் கருத்தரங்கம், பயிலரங்கம், உரையரங்கம், கவியரங்கம் முதலான பல்வகை வடிவங்களில் நிகழ்ச்சியை வழங்குவது இதன் நோக்கம்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச்சங்கம், பேச்சு, கட்டுரை, நாடகம், கவிதை, இசை, ஓவியம், நகைச்சுவை, நடனம் போன்ற போட்டிகளை நடத்தி, ஐந்து அறிவுக்களஞ்சிய விருதுகளான அறிவு மலா், அறிவுக் கதிா், அறிவுத் தளிா், அறிவுத் துளிா், அறிவுப் புதிா் ஆகியவற்றை வழங்கும் வகையில் இப்புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றாா் துணைவேந்தா்.

இந்நிகழ்வில் தமிழ்ப் பண்பாட்டு மைய இயக்குநா் க. திலகவதி, இணை இயக்குநா் செ. கற்பகம், உதவிப் பதிவாளா் ச. மல்லிகா, மு. காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com