பாபநாசம் கோயிலில் சித்திரை விஷு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

பாபநாசம் அருள்மிகு உலகாம்பிகை உடனுறை அருள்மிகு பாபநாச சுவாமி கோயில் சித்திரை விஷு திருவிழா,  அம்பாசமுத்திரம்
கொடியேற்றத்தைத் தொடர்ந்து கொடி மரத்திற்கு நடைபெற்ற சிறப்பு ஆராதனை.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து கொடி மரத்திற்கு நடைபெற்ற சிறப்பு ஆராதனை.

அம்பாசமுத்திரம்: பாபநாசம் அருள்மிகு உலகாம்பிகை உடனுறை அருள்மிகு பாபநாச சுவாமி கோயில் சித்திரை விஷு திருவிழா,  அம்பாசமுத்திரம் அன்னை மரகதாம்பிகை உடனுறை காசிநாதர் கோயிலில் பங்குனித் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

பாபநாசம், பாபநாச சுவாமி திருக்கோயிலில் சித்திரை விஷு திருவிழாவை முன்னிட்டு ஏப். 4 ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணத்தைத் தொடர்ந்து செவ்வாய்கிழமை காலை கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை சுவாமி, அம்பாள், கொடிமரம் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து சிவனடியார்களும், பக்தர்களும் வந்து வழிபட்டனர். 

கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.
கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.

இதைத் தொடர்ந்து திருவிழா நாள்களில் காலை மற்றும் இரவு ஏகசிம்மாசன, கைலாச பருவதம், அன்னம், பூதம், சிம்மம், ரிஷபம், கேடயம், வெட்டுங்குதிரை, காமதேனு, தந்தப் பூம்பல்லக்கு ஆகிய வாகனங்களில் சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெறும். 8 ஆம் திருநாளான ஏப்ரல் 12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை ஸ்ரீ நடராஜர் கேடயத்தில் வெள்ளை சாத்தி புறப்பாடு, மாலை 4 மணிக்கு பச்சை சாத்தி அலங்காரத்தில் புறப்பாடு நடைபெறும். 9ஆம் திருநாளான ஏப். 13 புதன்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் சுவாமி அம்பாள் தேருக்கு எழுந்தருளலும், திருத்தேர் வடம்பிடித்தலும் நடைபெறும். 

10ஆம் திருநாளான ஏப். 14 வியாழக்கிழமை பகல் 1 மணிக்கு சித்திரை விசு, தீர்த்தவாரியும், இரவு 8 மணிக்கு ஸ்ரீ பாபநாசர் உலகாம்பிகை தெப்ப உற்சவமும், ஏப். 15 அதிகாலை 1 மணிக்கு சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் திருமணக் கோலத்தில் அகஸ்திய முனிவருக்கு காட்சி கொடுத்தலும் நடைபெறும். காலை 8 மணிக்கு சுவாமி அம்பாள் மரபு மண்டபத்திற்கு அழைத்து வருதல், பகல் 12 மணிக்கு இறைவன் இறைவியர்க்கு குடமுழுக்கு, 1 மணிக்கு அன்னம் பாலிப்பு மாலை 5 மணிக்கு திருமுறை இன்னிசை, இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் உலா வருதல் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் வே.ராஜேந்திரன், தக்கார் மற்றும் உதவி ஆணையர் தி.சங்கர் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.

அம்பாசமுத்திரம் காசிநாதர் கோயில், அகஸ்தியர் கோயில், கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர் கோயில்களிலும் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றம் நடைபெற்றது. 

அம்பாசமுத்திரம் அன்னை மரகதாம்பிகை உடனுறை காசிநாதர் கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை மாலை 6.30 முதல் இரவு 8 மணிவரை அங்குரார்ப்பணம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை சுவாமி, அம்பாள், கொடிமரம் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் அம்பாசமுத்திரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து சிவனடியார்களும், பக்தர்களும் வந்து வழிபட்டனர்.

இதைத் தொடர்ந்து தினமும் இரவு கற்பக விருட்சம், காமதேனு, பூதம், சிம்மம், ரிஷபம், யானை, இந்திர விமானம், அன்னம், வெள்ளிச்சப்பரம், புஷ்பப் பல்லக்கு ஆகிய வாகனங்களில் வீதி உலா நடைபெறும். 7 ஆம் திருநாள் ஏப்.11 திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு நடராஜருக்கு சிவப்பு சாத்தி அலங்கார தீபாராதனை மற்றும் சிவப்பு சாத்தி வீதியுலா நடைபெறும். 

8 ஆம் திருநாள் ஏப். 12 செவ்வாய்கிழமை காலை 5 மணிக்கு நடராஜர் வெள்ளை சாத்தி, 9 மணி வெள்ளை சாத்தி வீதி உலா, பகல் 11 மணிக்கு பச்சை சாத்தியும், மாலை 6 மணிக்கு அகஸ்தியருக்கு இறைவன் திருமணக் காட்சியும் நடைபெறும். 9ஆம் திருநாள் ஏப். 13 புதன்கிழமை காலை 6 மணிக்கு சுவாமி அம்பாள் திருத்தேருக்குப் புறப்பாடு, காலை 9 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்தல், இரவு 9 மணிக்கு பூம்பல்லக்கில் சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெறும். 

10 ஆம் திருநாள் ஏப். 14 வியாழக்கிழமை காலை 10.30 முதல் பகல் 12 மணிக்குள் தீர்த்தவாரி நடைபெறும். விழா நாட்களில் தினந்தோறும் மாலை 6.30 மணிக்கு திருமுறை விண்ணப்பம், இரவு 7 மணிக்கு பக்திச் சொற்பொழிவு நடைபெறும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் மு.கிருஷ்ணவேணி, தக்கார் வே.ராஜேந்திரன், ஆய்வாளர் ச.கோமதி மற்றும் மண்டகபடி தாரர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com