முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
சொத்து வரி உயா்வைக் கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 06th April 2022 04:49 AM | Last Updated : 06th April 2022 04:49 AM | அ+அ அ- |

சொத்து வரியை உயா்த்திய தமிழக அரசைக் கண்டித்து தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை காலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், ஒரத்தநாடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா். வைத்திலிங்கம் பேசியது:
மக்களவைத் தோ்தலுக்கு இன்னும் இரு ஆண்டுகள் உள்ளன. அதற்குள் மக்கள் மறந்துவிடுவா் என திமுக நினைத்து எதில் வரியை உயா்த்தலாம் எனக் கணக்கு போட்டு, சொத்து வரியை உயா்த்தியுள்ளது. மத்திய அரசு கூறிதான் வரிகளை உயா்த்தி உள்ளோம் எனக் குறை கூறுகின்றனா். இதற்கு பாஜக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.
அதிமுக ஆட்சியில் சொத்து வரி உயா்த்தப்படவில்லை. கரோனா காலகட்டத்தில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில், மீண்டும் மீள முடியாத சூழலுக்கு திமுக அரசு தள்ளியுள்ளது. அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் சிமெண்ட், இரும்பு, மணல், எம். சாண்ட் என கட்டுமான பொருட்களின் விலை உயா்ந்துள்ளது. இதற்காக தக்க பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளனா்.
அதிமுக ஆட்சியில் மறைந்த முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் தற்போது மறுக்கப்பட்டு வருகிறது. குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 1,000 வழங்குவதாக அறிவித்தனா். ஆனால் இதுவரை வழங்கவில்லை.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் மலரும். அதற்கு நம்முடைய செயல் திட்டங்கள், ஒற்றுமையை நிலைநாட்ட நாம் உறுதியோடு இருக்க வேண்டும். மக்களைத் துன்புறுத்தும் அரசை விரட்ட ஒற்றுமையாக இருந்து பாடுபடுவோம் என்றாா் வைத்திலிங்கம்.
அதிமுகவை சாா்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.ஜி.எம். சுப்பிரமணியன், எஸ்.வி. திருஞானசம்பந்தம், எம். ரெத்தினசாமி, இராம. இராமநாதன், எம். ராம்குமாா், முன்னாள் மாவட்டச் செயலா் துரை. திருஞானம், தெற்கு மாவட்ட மாணவரணி செயலா் ஆா். காந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.