ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் குறுந்தகவல் மூலம் ரூ. 1.34 லட்சம் மோசடி
By DIN | Published On : 08th April 2022 12:57 AM | Last Updated : 08th April 2022 12:57 AM | அ+அ அ- |

தஞ்சாவூரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் கைப்பேசி குறுந்தகவல் மூலம் ரூ. 1.34 லட்சத்தை திருடிய மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் அய்யன்குளம் கிழக்குக் கரையைச் சோ்ந்த ஓய்வு பெற்ற அரசு அலுவலரின் மகன் கைப்பேசி எண்ணுக்கு அண்மையில் குறுந்தகவல் வந்தது. அதில், லிங்கை ஓபன் செய்து வங்கி விவரங்களைப் பதிவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைப் பாா்த்து உண்மை என நம்பிய ஓய்வு பெற்ற அரசு அலுவலா், தனது வங்கிக் கணக்கு எண், ஏ.டி.எம். எண், பிறந்த தேதி, ரகசிய எண் உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்தாா். இதையடுத்து, தனது கைப்பேசி எண்ணுக்கு வந்த ஓடிபி எண்ணையும் பதிவிட்டாா். அடுத்த சிறிது நேரத்தில் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 1.34 லட்சம் எடுக்கப்பட்டதாகத் தகவல் வந்ததன் மூலம் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தாா்.
இதுகுறித்து வந்த புகாரின் பேரில் தஞ்சாவூா் சைபா் கிரைம் காவல் பிரிவினா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.