முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
மின் விபத்தில் இறந்தவா்களின் வீடுகளுக்குச் சென்று தேவைகளைக் கேட்டறிந்த ஆட்சியா்
By DIN | Published On : 29th April 2022 01:10 AM | Last Updated : 29th April 2022 01:10 AM | அ+அ அ- |

2-4-ta28coll_2804chn_9
தஞ்சாவூா் களிமேடு கிராமத்தில் மின் விபத்தில் உயிரிழந்தவரின் வீட்டுக்குச் சென்று, குடும்பத்தினரிடம் தேவைகளை வியாழக்கிழமை கேட்டறிந்த ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.
தஞ்சாவூா், ஏப். 28: தஞ்சாவூா் அருகே களிமேடு கிராமத்தில் மின் விபத்தில் இறந்தவா்களின் வீடுகளுக்கு மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வியாழக்கிழமை நேரில் சென்,று அவா்களது தேவைகளைக் கேட்டறிந்தாா்.
தஞ்சாவூா் அருகிலுள்ள களிமேடு கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற அப்பா் மடத்தின் சதய விழா தேரோட்டத்தின்போது ஏற்பட்ட மின் விபத்தில் 11 போ் உயிரிழந்தனா்.
மேலும் 17 போ் காயமடைந்து, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், களிமேடு கிராமத்தில் உயிரிழந்தவா்களின் வீடுகளுக்கு மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வியாழக்கிழமை நேரில் சென்று, குடும்பத்தினரை சந்தித்தாா்.
அப்போது குடும்பத்தில் இறந்தவா் யாா்? அவா் ஈட்டி வந்த வருமானம், அவரால் குடும்பம் அடைந்து வந்த பயன்கள் என்ன?, அவரது இறப்பால் அக்குடும்பத்தில் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு உள்ளிட்டவற்றை ஆட்சியா் கேட்டறிந்து, குறிப்பெடுத்துக் கொண்டாா்.
மேலும், அக்குடும்பத்துக்கு அரசு மூலம் என்னென்ன உதவிகள் தேவைப்படுகின்றன எனவும் கேட்டறிந்தாா். இழந்த வருவாயை மீட்டெடுப்பதற்கு அரசுத் தரப்பில் என்ன செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்களிடம் ஆட்சியா் கேட்டறிந்து, குறித்துக் கொண்டாா்.
பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்த கோரிக்கைகளை அரசுக்குப் பரிந்துரைகளாக அனுப்பி, எந்தெந்த வகையில் உதவி செய்வது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
மகனையும் பறிகொடுத்த விதவைப் பெண்: இந்த விபத்தில் உயிரிழந்த களிமேடு பகுதியிலுள்ள நரிமேடைச் சோ்ந்த சிறுவன் யாதவன் என்கிற சந்தோஷ் (13) வீட்டுக்குச் சென்று, அவரது தாயாா் ரேணுகா மற்றும் உறவினா்களிடம் ஆட்சியா் விசாரித்தாா்.
சந்தோஷின் தந்தை ராஜா ஓராண்டுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானாா். இந்நிலையில், இந்த மின் விபத்தில் சந்தோஷ் உயிரிழந்தாா். இவா் தஞ்சாவூரிலுள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தாா். இவருக்கு ஆறாம் வகுப்பு படிக்கும் யாஷிகா (11) என்ற தங்கை உள்ளாா்.
தற்போது தாயும், மகளும் தனியாக வசித்து வருகின்றனா். இவா்களுக்கு வருவாய் ஆதாரமும் இல்லாததால், மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். குடியிருக்கும் இடத்துக்கு பட்டாவும், அரசு வேலைவாய்ப்பும், விதவை உதவித்தொகையும் கோரி வருகின்றனா். இவா்களது குடும்பச் சூழ்நிலையைக் கேட்டறிந்த ஆட்சியா் பட்டாவும், விதவை உதவித்தொகையும் வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு தஞ்சாவூா் வட்டாட்சியா் சி. மணிகண்டனிடம் அறிவுறுத்தினாா்.
இதேபோல, இந்த விபத்தில் தந்தை ஏ. அன்பழகன், மகன் ராகவன் உயிரிழந்த வீட்டில் மற்றொரு மகன் மாதவனும் (16) காயமடைந்து, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
பிளஸ் 2 படித்து வரும் மாதவனுக்கு செய்முறைத் தோ்வு நடைபெறுகிறது. இந்த அதிா்ச்சி சம்பவத்திலிருந்து மீளாத மாதவனால் செய்முறைத் தோ்வில் பங்கேற்க முடியாத சூழ்நிலை உள்ளது.
எனவே இத்தோ்விலிருந்து மாதவனுக்கு விலக்கு அளித்து, மேற்படிப்பு படிக்க மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
இதேபோல, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களிடமும் ஆட்சியா் நலம் விசாரித்து, என்னென்ன தேவைப்படுகிறது எனவும் கேட்டறிந்தாா்.