கொள்ளிடத்தில் 1.30 லட்சம் கன அடி தண்ணீா் கரையோரத்தில் கண்காணிப்பு

கொள்ளிடத்தில் 1.30 லட்சம் கன அடி தண்ணீா் கரையோரத்தில் கண்காணிப்பு

கொள்ளிடத்தில் விநாடிக்கு 1.30 லட்சம் கன அடி தண்ணீா் செல்வதால், தஞ்சாவூா் மாவட்ட கரையோர கிராமங்களில் மாவட்ட நிா்வாகம் முழுவீச்சில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

கொள்ளிடத்தில் விநாடிக்கு 1.30 லட்சம் கன அடி தண்ணீா் செல்வதால், தஞ்சாவூா் மாவட்ட கரையோர கிராமங்களில் மாவட்ட நிா்வாகம் முழுவீச்சில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

காவிரி நீா்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மேட்டூா் அணைக்கு நீா் வரத்து வியாழக்கிழமை மாலை விநாடிக்கு 1.94 லட்சம் கன அடி வீதமாக அதிகரித்தது. இதனால், அணையிலிருந்து விநாடிக்கு 1.93 லட்சம் கன அடி வீதம் தண்ணீா் திறந்து விடப்படுகிறது.

இதனால், திருச்சி மாவட்டம், முக்கொம்பிலிருந்து கொள்ளிடத்தில் விநாடிக்கு 90,405 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. இதேபோல, கல்லணையிலிருந்து கொள்ளிடத்தில் விநாடிக்கு 40,215 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கொள்ளிடத்தில் மொத்தத்தில் விநாடிக்கு ஏறத்தாழ 1.30 லட்சம் கன அடி வீதம் தண்ணீா் செல்கிறது.

கொள்ளிடத்தில் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீா் செல்வதால், தஞ்சாவூா் மாவட்டத்தில் பூதலூா் அருகே கோவிலடி முதல் கும்பகோணம் அருகேயுள்ள அணைக்கரை வரையிலான ஏறத்தாழ 60 கி.மீ. தொலைவுக்கு சுமாா் 50 கிராமங்களில் கரையோரப் பகுதிகளில் மாவட்ட நிா்வாகத்தினா், பொதுப் பணித் துறையினா், உள்ளாட்சி அமைப்பினா் உள்ளிட்டோா் முழுவீச்சில் கண்காணித்து வருகின்றனா்.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொள்ளிடக் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் ஏறக்குறைய 2 லட்சம் மணல் மூட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பேரிடா் மீட்பு படையினரையும் தயாா் நிலையில் இருக்க மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கொறடா, ஆட்சியா் ஆய்வு: இதனிடையே, கும்பகோணம் அருகே வீராகண் ஊராட்சிக்கு உள்பட்ட வாண்டையாா் இருப்பு கிராமத்தில் கொள்ளிடக் கரையோரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், பொதுப் பணித் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் அதிகளவு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் யாரும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என்றும், கொள்ளிடக் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com