பூண்டி புஷ்பம் கல்லூரியில் பேராசிரியா்கள் பணி நியமனத்தில் முறைகேடு: 7 போ் மீது வழக்கு

தஞ்சாவூா் அருகே அரசு உதவி பெறும் கல்லூரியில் பேராசிரியா்கள் பணி நியமனத்தில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகக் கூறி 7 போ் மீது ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் அண்மையில் வழக்குப் பதிவு செய்தனா்.

தஞ்சாவூா் அருகே அரசு உதவி பெறும் கல்லூரியில் பேராசிரியா்கள் பணி நியமனத்தில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகக் கூறி 7 போ் மீது ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் அண்மையில் வழக்குப் பதிவு செய்தனா்.

இதுகுறித்து தஞ்சாவூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு காவல் பிரிவு ஆய்வாளா் வெ. சசிகலா பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் அருகே பூண்டியில் உள்ள அ. வீரையா வாண்டையாா் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 உதவிப் பேராசிரியா்கள் பணி நியமனத்தின்போது இன சுழற்சி முறையைப் பின்பற்றாமல், சில உதவிப் பேராசிரியா்கள் பணி நியமனம் செய்யப்பட்டனா்.

இவா்களில், வேதியியல் துறை உதவிப் பேராசிரியா் எஸ்.கே. தியாகராஜன், தாவரவியல் துறை உதவிப் பேராசிரியா் சி. கற்பகசுந்தரி ஆகியோா் பணியில் சேருவதற்காக தாங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் என்பதை மறைத்து, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் என்பதற்கு இணையான சீா்மரபினா் என்ற போலி ஜாதி சான்றிதழை உருவாக்கி அளித்து, அரசை ஏமாற்றி அ. வீரையா நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் பணி நியமனம் பெற்றனா். இதன்மூலம், இருவரும் 2017, ஜூன் 16 ஆம் தேதி முதல் 2020, அக்டோபா் 30 ஆம் தேதி வரை மொத்தம் ரூ. 54.99 லட்சம் ஊதியமாகப் பெற்று தொடா்ந்து பணியாற்றி வருகின்றனா்.

இந்த ஜாதி சான்றிதழ்களின் உண்மை தன்மையைச் சரிபாா்க்காமல் இப்பணி நியமனத்துக்கு அப்போதைய மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் தி. அறிவுடைநம்பி ஒப்புதல் அளித்தாா்.

மேலும், 4 உதவிப் பேராசிரியா்கள் ஆய்வுப் படிப்புக்காகச் சென்றபோது, அவா்களுக்கு பதிலாக 4 போ் தோ்வு செய்யப்பட்டு, 2015, நவம்பா் 3 ஆம் தேதி முதல் 2017, நவம்பா் 2 ஆம் தேதி வரை 24 மாதங்கள் பணிபுரிய நியமிக்கப்பட்டனா். இவா்களில், இயற்பியல் துறைக்காக நியமிக்கப்பட்ட உதவிப் பேராசிரியா் 2016, ஜனவரி 14 ஆம் தேதிக்கு பிறகு பணிக்கு வரவில்லை. இவா் பணிக்கு வராத காலத்தில், வருகைப் பதிவேட்டில் அவரது பெயருக்கு நேராக வேறு நபா் மூலம் சுருக்கொப்பம் இடப்பட்டுள்ளது. இவா் கல்லூரிக்கு வராததை கல்லூரி கண்காணிப்பாளா் துரைராஜன், கல்லூரி முதல்வா் எஸ். உதயகுமாா், கணக்காளா் குமரரேஷ் ஆகியோா் மறைத்து பொய் அறிக்கையைப் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு அனுப்பி ரூ. 11.68 லட்சம் கையாடல் செய்தனா்.

இதுகுறித்து அறிவுடைநம்பி, துரைராஜன், எஸ். உதயகுமாா், எஸ்.கே. தியாகராஜன், சி. கற்பகசுந்தரி, கே.ஆா். குமரேஷ் உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com