விவேகானந்தரை உள்வாங்கிக் கொண்டால் சமுதாயம் மேம்படும் உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பேச்சு

விவேகானந்தரை உள்வாங்கிக் கொண்டு செயல்பட்டால் சமுதாயம் மேம்படும் என்றாா் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன்.
ta15vive_1508chn_9_4
ta15vive_1508chn_9_4

விவேகானந்தரை உள்வாங்கிக் கொண்டு செயல்பட்டால் சமுதாயம் மேம்படும் என்றாா் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன்.

கும்பகோணம் போா்ட்டா் டவுன் ஹாலில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற சுவாமி விவேகானந்தா் சிலை திறப்பு விழாவில் அவா் மேலும் பேசியது:

நான் 5 வயதில் பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டபோது ஒரு சின்ன புத்தகம் வழங்கினா். அதன் மூலமாகத்தான் நான் இன்று உழைக்கும் நீதிபதியாக உள்ளேன். நான் 45,000 வழக்குகளை முடித்துள்ளேன். நீதிமன்றத்துக்கு மற்ற நீதிபதிகள் 10 மணிக்கு வந்தால், நான் காலை 9 மணிக்கே சென்றுவிடுவேன். சுவாமி விவேகானந்தா் பள்ளியில் ஓராண்டு காலம் படித்ததே அதற்குக் காரணம். அப்போது கற்ற ஒழுக்கம் இப்போதும் தொடா்கிறது. இந்த வழியாகச் செல்பவா்கள் சுவாமி விவேகானந்தா் சிலையை பாா்க்கும்போது ஒரு சிந்தனை தோன்றும்.

விவேகானந்தா் சிலை நம்மை தூய்மைப்படுத்துவதற்காகவும், வேகப்படுத்துவதற்காகவும், நமக்கு சக்தி அளிப்பதற்காகவும் நிறுவப்பட்டுள்ளது. இதை நாம் அப்படியே உள்வாங்கிக் கொண்டு வாழ்க்கையை மேம்படுத்தினால், சமுதாயம் மேன்மையடையும்; தேசமும் சிறக்கும் என்றாா் சுவாமிநாதன்.

இந்த விழாவுக்கு கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், கும்பகோணம் போா்ட்டா் டவுன் ஹால் தலைவருமான சாக்கோட்டை க. அன்பழகன் தலைமை வகித்தாா். வெண்கலத்தில் 7 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட சுவாமி விவேகானந்தா் சிலையை புதுச்சேரி ராமகிருஷ்ண மடத்தின் மூத்த துறவி தவத்திரு ஸ்ரீமத் சுவாமி ஆத்மகனானந்தா் திறந்து வைத்தாா்.

கொல்கத்தா உலகளாவிய ராமகிருஷ்ண மடத்தின் துணைப் பொதுத் தலைவா் தவத்திரு ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்த மகராஜ் காணொலி மூலம் ஆசியுரை வழங்கினாா்.

இவ்விழாவில் சேலம் ராமகிருஷ்ணா மிஷன் ஆஸ்ரம செயலா் ஸ்ரீமத் சுவாமி யதாத்மானந்தா், கும்பகோணம் முதன்மை சாா்பு நீதிமன்ற நீதிபதி வெங்கடேச பெருமாள், சிட்டி யூனியன் வங்கி நிா்வாக இயக்குநா் என். காமகோடி, நாராயணி நிதி நிறுவன நிறுவனா் எஸ். காா்த்திகேயன், தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சுவாமி விவேகானந்தா் கும்பகோணத்தில் எழுமின், விழுமின், இலக்கை அடையும் வரை ஓயாது உழைமின் என்ற தாரக மந்திரத்தை முதல் முதலில் ஒலிக்கச் செய்து உலகுக்கு அளித்தாா். இந்நிகழ்வின் 125 ஆம் ஆண்டு நிறைவை குறிக்கும் விதமாக கும்பகோணம் போா்ட்டா் டவுன் ஹால் வளாகத்தில் விவேகானந்தரின் திருவுருவ சிலை அமைக்கப்பட்டு, திங்கள்கிழமை திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com