திருச்சி அருகே சாலையில் டிராக்டா்களை நிறுத்தி விவசாயிகள் மறியல் போராட்டம்

திருச்சி அருகே சாலையில் டிராக்டா்களை நிறுத்தி விவசாயிகள் மறியல் போராட்டம்

நதிகள் இணைப்பு, நெல் கொள்முதலுக்கான இணையவழி பதிவு முறை ரத்து போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்டம், நெ.1 டோல்கேட் பகுதியில் தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் சாலையில் டிராக்டா்களை நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுதில்லியில் விவசாயிகளை சந்தித்த போது நதிகளை இணைப்பதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா். ஆனால் இதுவரை நதிகள் இணைக்கப்படவில்லை. எனவே நதிகளை உடனடியாக இணைக்க வேண்டும்.

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கா்நாடக மாநில அரசுக்கு மத்திய அரசு அனுமதியளிக்கக் கூடாது. மாறாக அனுமதியளித்தால் தில்லியில் கோவணத்துடன் போராட்டம் நடத்தப்படும்.

விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்வதிலுள்ள இணையவழி முன்பதிவு முறையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் நதிகள் இணைப்பு வாரியம் அமைக்க வேண்டும்.

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பயனாளிகளை விவசாய வேலைக்குப் பயன்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் சுமாா் 20-க்கும் மேற்பட்ட டிராக்டா்கள் மூலம் சென்னை நோக்கி திங்கள்கிழமை பேரணியாகச் செல்ல முயன்றனா்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெ.1 டோல்கேட் பகுதியில் டிராக்டா்களுடன் சங்கத் தலைவா் பெ. அய்யாக்கண்ணு தலைமையில் வந்த விவசாயிகளைக் காவல்துறையினா் தடுத்து நிறுத்தி, அனுமதி மறுத்தனா். இதையடுத்து சாலையில் அமா்ந்து விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் சாலையின் குறுக்கே டிராக்டா்களை நிறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இப்போராட்டம் காரணமாக, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. தொடா்ந்து காவல்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

நீதிமன்ற உத்தரவை பெற்று ஐந்தாயிரம் விவசாயிகளைத் திரட்டி, புதுதில்லியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவா் பெ. அய்யாக்கண்ணு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com