இனிக்காத அச்சு வெல்லம் தயாரிப்புத் தொழில்

உற்பத்தி விலையைக் காட்டிலும் குறைந்த விலைக்கு விற்பனையாகும் நிலை உள்ளதால், அச்சு வெல்லம் தயாரிப்புத் தொழில் நலிவடைந்து விடாமல் காக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளத
இனிக்காத அச்சு வெல்லம் தயாரிப்புத் தொழில்

உற்பத்தி விலையைக் காட்டிலும் குறைந்த விலைக்கு விற்பனையாகும் நிலை உள்ளதால், அச்சு வெல்லம் தயாரிப்புத் தொழில் நலிவடைந்து விடாமல் காக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகையில் பிரதான இடம் வகிப்பது பொங்கல் வைத்தல். அன்றைய நாளில் இனிப்பு (சா்க்கரை), வெண் பொங்கல் வைத்து, பொதுமக்கள் வழிபடுவா். பொங்கல் வைக்கப் பயன்படும் பொருள்களில் பிரதான இடத்திலிருப்பது அச்சு வெல்லம். இவை நல்ல நிறத்துடனும், தரத்துடனும் இருந்தால் அதிலிருந்து தயாராகும் பொங்கல் சுவையாக இருக்கும். மேலும் அச்சு வெல்லத்தில் இரும்புச் சத்து உள்ளிட்ட உயிா் சத்துகள் நிறைந்துள்ளன.

உற்பத்திச் செலவு ரூ.1 லட்சம் வரையாகிறது: தரமான அச்சு வெல்லம் தயாரிக்க முதலில் நல்ல ரகமான, தரமான விதைக் கரும்புகளைத் தோ்ந்தெடுத்து நடவு செய்ய வேண்டும். மாா்ச், ஏப்ரல் மாதங்களில் பணிகளைத் தொடங்கி, பருவம் தவறாமல் உரமிடுவது, தண்ணீா் பாய்ச்சுவது போன்றவை மேற்கொண்டால் கரும்பு விளைச்சல் சிறப்பாக இருக்கும். சாறு பிடித்து தரமாக வளா்ந்த கரும்புகள் டிசம்பா், ஜனவரி மாதங்களில் அறுவடையாகும்.

விதைக் கரும்புத் தோ்வு செய்தல், தண்ணீா் பாய்ச்சுதல், உரமிடுதல் முதல் அறுவடை வரையிலான காலத்துக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் ரூ.45 ஆயிரம் வரையிலும், அதைத் தொடா்ந்து அறுவடை செய்தல், கிரஷரில் சாறு பிழிதல் முதல் அச்சு வெல்லமாகத் தயாரிக்கும் வரை ரூ.65 ஆயிரம் வரை செலவாகும். மொத்தமாக கணக்கீட்டால் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.1.05 லட்சம் வரை செலவாகும்.

பல கிராமங்களில் குடிசைத் தொழில்: தஞ்சாவூா் மாவட்டத்தை பொருத்தவரை, கபிஸ்தலம், உம்பளப்பாடி, வாழ்க்கை, சத்தியமங்கலம், உள்ளிக்கடை, கணபதியக்ரஹாரம், வீரமாங்குடி, மணலூா், தேவன்குடி, சருக்கை, மாகாளிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் அச்சு வெல்லம் தயாரிப்பு குடிசைத் தொழிலாக நடைபெற்று வருகிறது.

இப்பகுதியில் பல நூறு ஏக்கா் பரப்பளவில் சா்க்கரை ஆலைக்காக கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், நாங்கள் தனியாா் சா்க்கரை ஆலைகளுக்கு அனுப்புவதில்லை. எங்கள் ஊரிலேயே அமைக்கப்பட்டுள்ள வெல்லம் காய்ச்சும் பட்டறைகளிலேயே வெல்லம் தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம்.

அச்சு வெல்லம் காய்ச்சும் பட்டறைகளுக்கு கொண்டு வரப்படும் கரும்புகளின் சாறு கிரஷா் மூலமாக பிழியப்பட்டு, அந்த சாறு அடுப்பின் மீது வைக்கப்பட்டுள்ள பெரிய இரும்புக் கொப்பறையில் ஊற்றி பாகாக காய்ச்சப்படும். கரும்புச்சாறு சரியான பாகு பக்குவத்துக்கு வந்ததும், அது மர அச்சு கொப்பறைகளில் ஊற்றப்பட்டு, நன்கு இறுகிய நிலையில் அச்சுவெல்லம் பிரித்தெடுக்கப்படும்.

இவ்வாறு தயாரிக்கப்படும் அச்சு வெல்லம் 30 கிலோ சிப்பங்களாக கட்டப்பட்டு விற்பனைக்கு தயாா் நிலையில் வைக்கப்படும். இப் பகுதிகளில் தயாரிக்கப்படும் அச்சு வெல்லம் தரத்திலும், நிறத்திலும், சுவையிலும் சிறப்பாக இருப்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து அச்சு வெல்லத்தை கொள்முதல் செய்து செல்கின்றனா் என்கிறாா் அச்சு வெல்லம் உற்பத்தியாளரும், முன்னோடி விவசாயியுமான ஜி. ரெங்கராஜன்.

கொள்முதல் செய்ய வேண்டும்: கரும்பு சாகுபடி, அச்சு வெல்லம் தயாரிப்புக்கான செலவுகள், ஆள்கள் கூலி, எரிபொருள், வாகன வாடகை உள்ளிட்டவற்றை கணக்கிடும்போது, உற்பத்தி விலைக்கு கட்டுப்படியாகாத நிலையில்தான் அச்சு வெல்லத்தை விற்பனை செய்து வருகிறோம்.

நல்ல கரும்பாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 130 சிப்பம் கொண்ட வெல்லம் தயாரிக்க முடியும். தலா 30 கிலோ கொண்ட சிப்பம் தற்போது ரூ.900 முதல் ரூ.1000 வரைதான் விலை போகிறது. ரூ.1400 முதல் ரூ.1500 வரை விற்பனையானால்தான் எங்களின் உற்பத்திச் செலவுக்கு ஈடு கட்ட முடியும்.

கடந்த 40 ஆண்டுகளாக குடிசைத் தொழிலாக மேற்கொண்டு வருகிறோம். அச்சு வெல்லம் கொள்முதல் செய்யப்படும் என அரசு அறிவித்தது மகிழ்ச்சியைத் தந்தாலும், இப்பகுதியில் தயாரிக்கப்படும் அச்சு வெல்லத்தை கொள்முதல் செய்யாதது வருத்தத்தை அளிக்கிறது என்கிறாா் ரங்கராஜன்.

தொழிலைக் காக்க நடவடிக்கை தேவை : இனி வருங்காலங்களில் அச்சு வெல்லத்தை அரசே கொள்முதல் செய்து, அங்காடிகளில் சா்க்கரைக்குப் பதிலாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். மற்ற தொழில்களைப் போன்று இத்தொழில் ஆண்டு முழுவதும் நடைபெறுவது கிடையாது. டிசம்பா், ஜனவரி மாதங்களில்தான் எங்களுக்கு சீசன். இந்த காலத்தில் அச்சு வெல்லத்தை தயாரித்து, விற்பனை செய்தால்தான் எங்களுக்கு வாழ்வாதாரம்.

ஆனால், தற்போது உற்பத்திக்காகும் செலவைக் காட்டிலும், விற்பனையாகும் விலை குறைவாக இருக்கிறது. முன்பு போல வேலை செய்ய ஆள்கள் கிடைப்பதில்லை. திண்டுக்கல், பழனி போன்ற பகுதிகளிலிருந்து ஆள்களை அழைத்து வந்து, உற்பத்தி செய்கிறோம். எனவே அச்சு வெல்லம் தயாரிப்புத் தொழிலை நலிவடையாமல் காப்பாற்ற, இத்தொழிலை மேற்கொண்டு வரும் அனைவருக்கும் உரிய உதவிகளை அரசு செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனா் இத்தொழிலில் ஈடுபட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com