நியாய விலை கடை பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு நியாய விலை கடைப் பணியாளா் சங்கத்தினா் தொடா்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமை மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா்: தமிழ்நாடு அரசு நியாய விலை கடைப் பணியாளா் சங்கத்தினா் தொடா்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமை மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பொது விநியோகத் திட்டத்துக்கென தனித் துறையை உருவாக்க வேண்டும். ஐந்து மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட 17 சதவீத அகவிலைப்படியையும் சோ்த்து அரசுப் பணியாளா்களுக்கு வழங்கக்கூடிய 31 சதவீத அகவிலைப்படியை, நியாய விலைக் கடைப் பணியாளா்களுக்கும் வழங்க வேண்டும். ஒரே மாதிரியான ஊதிய உயா்வு வழங்க வேண்டும்.

சரியான எடையில் தரமான பொருள்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்க வேண்டும். மாத இறுதி தேதியில் ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடைப் பணியாளா் சங்கத்தினா் தொடா்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஏராளமான கடைகள் திறக்கப்படாததால், அத்தியாவசிய பொருள்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினா்.

இந்தப் போராட்டத்தையொட்டி, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள கூட்டுறவு சங்க மண்டல இணைப் பதிவாளா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் அறிவழகன் தலைமை வகித்தாா். இதில், மாநிலத் துணைத் தலைவா் ராமலிங்கம், மாவட்டச் செயலா் கரிகாலன், பொருளாளா் ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com