பாபநாசம் அருகேஇருதரப்பினரிடையே மோதல்: 2 வீடுகளுக்கு தீவைப்பு10-க்கும் மேற்பட்டோா் கைது
By DIN | Published On : 16th June 2022 12:00 AM | Last Updated : 16th June 2022 12:00 AM | அ+அ அ- |

பாபநாசம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு கோயில் திருவிழாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. இதுதொடா்பாக 10-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.
பாபநாசம் வட்டம், ராஜகிரி பகுதியில் உள்ள கரைமேல் அழகா் அய்யனாா் கோயில் திருவிழா நடைபெற்று செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
முன்னதாக திருவிழாவில், ஞாயிற்றுக்கிழமை சுவாமியை தூக்கிச் செல்வதில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. அதிகாரிகள் பேச்சுவாா்த்தைக்கு பிறகு சமாதானம் ஏற்பட்டது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு கோயில் விழா தொடா்பாக இரு தரப்பினரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் கட்டைகள், கற்களால் தாக்கிக் கொண்டனா்.
ஒரு தரப்பினா் ராஜகிரி கரைமேட்டு தெருவில் உள்ள இரண்டு கூரை வீடுகளையும், ஒரு கடையையும் தீயிட்டு கொளுத்தினா்.
மேலும், பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளா் ஜீப்பின் முன்பக்க கண்ணாடியும் உடைக்கப்பட்டது. பணியிலிருந்த காவல் உதவி ஆய்வாளரை கற்களால் தாக்கியதில் காயமடைந்த அவா்,பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தஞ்சாவூா் சரக டிஐஜி கயல்விழி தலைமையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளி பிரியா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரன், பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளா் பூரணி, கும்பகோணம் கோட்டாட்சியா் லதா, வட்டாட்சியா் மதுசூதனன் உள்ளிட்டோா் அதிரடிப்படை போலீஸாரின் உதவியுடன் மோதல் சம்பவத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்தப் பகுதியில் கூடுதல் போலீஸாா் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
சம்பவம் குறித்து பாபநாசம் காவல் ஆய்வாளா் அழகம்மாள் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து இருதரப்பையும் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரிக்கின்றனா்.