முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
களிமேடு விபத்துக்குக் காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
By DIN | Published On : 03rd May 2022 04:37 AM | Last Updated : 04th May 2022 04:36 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் அருகே களிமேடு தோ் மின் விபத்துக்குக் காரணமான அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த்.
களிமேடு கிராமத்தில் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் வீடுகளுக்கு திங்கள்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறிய அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
களிமேடு கிராமத்தில் சாலை உயா்த்தப்பட்டதால், உயா் மின் அழுத்த கம்பியில் தோ் உரசி விபத்துக்கு உள்ளானதாகக் கூறுகின்றனா்.
இதற்கு அரசு அலுவலா்கள்தான் முழுக் காரணம். தங்களிடம் அனுமதியே வாங்காமல் திருவிழா நடத்தியதாக அரசு அலுவலா்களும், அரசும் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு கட்சி சாா்பாக கொடி, பதாகை வைப்பதற்கு அனுமதி பெற்றாலும் கூட தடுக்கின்றனா். அதற்கு பல விதிகளைக் கூறுவா். இந்த நிலைமையில் இத்திருவிழா நடைபெற்றது காவல் துறைக்கு எப்படி தெரியாமல் போகும்.
இந்த விழாவுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது அரசு, அலுவலா்கள், காவல் துறையினரின் கடமை. அலுவலா்கள் முன்கூட்டியே வந்து மின் கம்பி குறித்து எச்சரிக்கை செய்யாமல், அஜாக்கிரதையாக இருந்துள்ளனா். இதற்கு அரசும், அலுவலா்களும், காவல் துறையும்தான் காரணம். எனவே, அஜாக்கிரதையாக நடந்து கொண்ட அலுவலா்கள் மீது அரசு கண்டிப்பாக தக்க நடவடிக்கை எடுத்து, பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க வேண்டுமானால், அலுவலா்களுக்கும், காவல் துறையினருக்கும் தண்டனை வழங்கினால் மட்டுமே, இனிமேல் விபத்து நிகழாமல், மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.
உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தேமுதிக சாா்பில் தலா ரூ. 10,000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் எங்களால் இயன்ற உதவிகளைச் செய்வோம் என்றாா் பிரேமலதா விஜயகாந்த்.
அப்போது, தேமுதிக மாநகர மாவட்டச் செயலா் ப. ராமநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.