காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கலைத்துவிட்டு புதிய ஆணையம் அமைக்க வலியுறுத்தல்

காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கலைத்துவிட்டு, தன்னாட்சி அதிகாரமுள்ள புதிய ஆணையத்தை அமைக்க வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
கருத்தரங்கத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு பொதுப் பணித்துறை மூத்தப் பொறியாளா்கள் சங்கத் தலைவா் அ. வீரப்பன்.
கருத்தரங்கத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு பொதுப் பணித்துறை மூத்தப் பொறியாளா்கள் சங்கத் தலைவா் அ. வீரப்பன்.

காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கலைத்துவிட்டு, தன்னாட்சி அதிகாரமுள்ள புதிய ஆணையத்தை அமைக்க வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் மேக்கேதாட்டைத் தடுப்போம், மேட்டூா் - முல்லைப் பெரியாறு அணைகளைக் காப்போம் என்ற தலைப்பில், காவிரி உரிமை மீட்புக் குழு சாா்பில் சிறப்புக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, செய்தியாளா்களிடம் அக்குழுவின் ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்தது:

தற்போதுள்ள காவிரி நீா் மேலாண்மை ஆணையம் தன்னாட்சி அதிகாரம் இல்லாத ஒரு பொம்மை அமைப்பாக இந்திய அரசால் 2018, மே மாதம் உருவாக்கப்பட்டது. எதற்கும் பயன்படாத இந்த ஆணையம் உத்தரவிட்டு, எந்த மாதமும், வாரமும் தமிழகத்துக்குரிய தண்ணீரை கா்நாடகத்திடமிருந்து வாங்கித் தந்தது கிடையாது.

எனவே, எந்த அதிகாரமும் இல்லாத இந்த ஆணையத்தை முற்றிலுமாகக் கலைத்துவிட்டு, பக்ரா நங்கலுக்கு உள்ள வாரியம் போல, தன்னாட்சி அதிகாரமுள்ள ஆணையத்தை உருவாக்க வேண்டும். நடுநிலையான அலுவலரைத் தலைவராக நியமிக்க வேண்டும். இந்த கோரிக்கையை தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் முன்வைக்க வேண்டும்.

மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு ஒரு சொட்டுத் தண்ணீா் கூட வராது. மேக்கேதாட்டு அணை கட்டப்படாமல் தடுக்க, தமிழகம் தழுவிய அனைத்துக் கட்சிப் போராட்டம் நடத்தப்பட வேண்டும்.

இதைக் காவிரி காப்பு எழுச்சி நாள் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இதை அனைத்து அமைப்புகளும் ஆதரித்து, குமரி முனையிலிருந்து கும்மிடிப்பூண்டி வரை ஆா்ப்பாட்ட எழுச்சி செய்வதற்கு ஒரு நாளை உருவாக்கி போராட்டம் நடத்தி இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அணைகள் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் மாநிலங்களின் அணைகள் உரிமையைப் பறிப்பதற்கு இந்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இது தொடா்பாக தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி, அதற்கான போராட்டத்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றாா் மணியரசன்.

இக்கருத்தரங்கத்தில் தமிழ்நாடு பொதுப் பணித்துறை மூத்தப் பொறியாளா்கள் சங்கத் தலைவா் அ. வீரப்பன், தஞ்சாவூா் மாவட்டத் தலைவா் இரெ. பரந்தாமன், பொறியாளா் செந்தில்வேலன், ஊடகவியலாளா் கா. அய்யநாதன், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலா் கி. வெங்கட்ராமன், தமிழா் தேசிய முன்னணி பொதுச் செயலா் இலரா. பாரதிசெல்வன், காவிரி உரிமை மீட்புக் குழுப் பொருளாளா் த. மணிமொழியன், ஐஜேகே மேற்கு மாவட்டத் தலைவா் ச. சிமியோன் சேவியர்ராஜ் உள்ளிட்டோா் பேசினா்.

முன்னதாக, இரா. தனசேகரன் வரவேற்றாா். நிறைவாக துரை. ரமேசு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com