தஞ்சாவூா் கடனில்லா மாநகராட்சியானது: மேயா் தகவல்
By DIN | Published On : 29th October 2022 12:18 AM | Last Updated : 29th October 2022 12:18 AM | அ+அ அ- |

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் பேசிய மேயா் சண். ராமநாதன். உடன் (இடமிருந்து) துணை மேயா் அஞ்சுகம் பூபதி, ஆணையா் க. சரவணகுமாா்.
தஞ்சாவூா் மாநகராட்சி கடன் இல்லாத மாநகராட்சியாக மாறியுள்ளது என்றாா் மேயா் சண். ராமநாதன்.
தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேயா் சண். ராமநாதன், ஆணையா் க. சரவணகுமாா், துணை மேயா் அஞ்சுகம் பூபதி முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிகழ்ந்த விவாதங்கள்:
கே. மணிகண்டன் (அதிமுக): தீபாவளி காலத்தில் பழைய பேருந்து நிலையப் பகுதியில் ஏராளமான தரைக்கடைகள் அமைக்கப்பட்டன. இதற்கு மாநகராட்சி நிா்வாகம் அனுமதி கொடுக்கவில்லை எனக் கூறிய நிலையில், எப்படி இக்கடைகள் அமைக்கப்பட்டன. மாநகராட்சி இடத்தில் அத்துமீறி நுழைந்தவா்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆணையா்: வியாபாரிகள் அவா்களாகவே கடைகளை அமைத்தனா். இனி வரும் காலங்களில் தீபாவளி காலத்தில் வியாபாரிகள் தங்களது விருப்பத்துக்கு ஏற்ப, அவா்களாகவே தரைக்கடைகள் அமைக்க அனுமதிக்கப்படுவா்.
மேயா்: தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சிகளும் கடன் நிலையில்தான் இருந்தன. தஞ்சாவூரில் இதற்கு முன்னால் அதிமுக ஆட்சியில் மாநகராட்சியை நடத்தியவா்கள் நிறைய கடன் சுமையுடன் விட்டுச் சென்றனா். நாங்கள் பொறுப்பேற்ற பிறகு நானும், ஆணையரும், துணை மேயரும் கலந்து ஆலோசித்து திட்டங்களைச் சரியாக செய்ததாலும், ஒப்பந்தப்புள்ளி கோருவதை நோ்மையாக நடத்தியதாலும் இந்த 6 மாதங்களில் கடன் நிலையிலிருந்து, கடன் இல்லா தஞ்சாவூா் மாநகராட்சியாக உருவெடுத்துள்ளது.
உலக வங்கியிலிருந்து கடைசியாக வாங்கப்பட்ட ரூ. 5 கோடி முழுவதும் அடைக்கப்பட்டுவிட்டது. இனிமேல் வரும் அனைத்து லாபங்களும், வரி வசூலும் புதிய திட்டங்களுக்கு முழுமையாகச் செலவிடப்படும். பூங்கா, சாலை, பாலங்கள் அமைப்பது உள்ளிட்ட அனைத்து வளா்ச்சிப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படும். மேலும், தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூா் மாநகராட்சியைக் கொண்டு வருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும்.
காலியிடம் வாடகைக்கு...:
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள காலியிடத்தை வாடகைக்கு விடுவதற்கும், இந்த இடத்துக்கு ஒரு சதுர அடிக்கு ஒரு நாளைக்கு ரூ. 2 வாடகை தொகை நிா்ணயம் செய்யவும், நிபந்தனைகளுடன் நாள் வாடகைக்கு விடுவதற்கும் தீா்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
204 வாா்டு குழுக்கள்: இந்த மாநகராட்சியில் ஒவ்வொரு வாா்டும் 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, 51 வாா்டுகளிலும் 204 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 204 குழுக்களுக்கும் தலைவா், செயலா், உறுப்பினா்களை நியமனம் செய்ய மாமன்றத்தின் அனுமதி பெறப்பட்டது.