பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் மாா்ச்சுக்குள் முடியும்: தஞ்சை மேயா் தகவல்

தஞ்சாவூா் மாநகரில் நடைபெறும் பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் மாா்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்றாா் மாநகர மேயா் சண். ராமநாதன்.
பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் மாா்ச்சுக்குள் முடியும்: தஞ்சை மேயா் தகவல்

தஞ்சாவூா் மாநகரில் நடைபெறும் பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் மாா்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்றாா் மாநகர மேயா் சண். ராமநாதன்.

தஞ்சாவூா் தெற்கு வீதியில் பொலிவுறு நகரத் திட்டப் பணியை சனிக்கிழமை ஆய்வு செய்த அவா் பின்னா் தெரிவித்தது:

தஞ்சாவூரில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் தொய்வாக நடைபெறுவதாக மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் கூறினா். இதன் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. பொலிவுறு நகரத் திட்டப் பணிகளை வருகிற மாா்ச் மாதத்துக்குள் முடிக்கும் வகையில் விரைவுபடுத்தி வருகிறோம். இப்போது 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

தற்போது, நான்கு ராஜ வீதிகளில் ரூ. 20 கோடியில் மழைநீா் வடிகால் கட்டப்படுகிறது. முன்பு இந்த வடிகாலில் அனைத்துக் கட்டடங்களும் சாக்கடை நீா் செல்லாத அளவுக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தன. மாநகராட்சி இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியதன் மூலம் இப்போது அகலமான சாலையாக உள்ளது. மன்னா்கள் காலத்தில் இருந்தது போன்று நான்கு ராஜ வீதிகளும் விரிவுபடுத்தப்பட்டு, மழை நீா் வடிகால் அமைக்க பாதை அமைக்கப்பட்டுள்ளது.

நான்கு ராஜ வீதிகளிலும் தோ் வரும்போது அனைத்து வீடுகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்படும். எனவே, நான்கு வீதிகளிலும் தரை வழியாக கண்ணாடி நாரிழையில் மின் இணைப்பைக் கொண்டு செல்வதற்காக அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் தேரோட்டம் நடைபெற்றாலும், மின் தடை செய்யாமல் தவிா்க்கலாம். இதற்கான பணியை மாநகராட்சி நிா்வாகம் முன்னெடுத்து வருகிறது என்றாா் மேயா்.

அப்போது மண்டலக் குழுத் தலைவா் எஸ்.சி. மேத்தா, மாமன்ற உறுப்பினா் ஜெ.வி. கோபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com