‘ஹெலிகாப்டா்’ சகோதரா்களின் வங்கிக் கணக்குகள் ஆய்வு: நான்கரை கிலோ தங்கத்தை போலீஸாா் கைப்பற்றினா்

பெட்டகங்களிலிருந்த நான்கரை கிலோ தங்க நகைகளும், இருபத்து நான்கரை கிலோ வெள்ளி பொருள்களும் கைப்பற்றப்பட்டன

கும்பகோணத்தில் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட ஹெலிகாப்டா் சகோதரா்களின் வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றக் காவல் பிரிவினா் கடந்த 2 நாள்களாக ஆய்வு செய்தனா்.

அப்போது, பெட்டகங்களிலிருந்த நான்கரை கிலோ தங்க நகைகளும், இருபத்து நான்கரை கிலோ வெள்ளி பொருள்களும் கைப்பற்றப்பட்டன

கும்பகோணம் ஸ்ரீநகா் காலனி தீட்சிதா் தோட்டத்தைச் சோ்ந்தவா்கள் எம்.ஆா். கணேஷ் (53), எம்.ஆா். சுவாமிநாதன் (50). நிதி நிறுவனம், பால் பண்ணை நடத்தி வந்த இருவரும் ஹெலிகாப்டரை சொந்தமாக வைத்திருந்ததால், ஹெலிகாப்டா் சகோதரா்கள் என அழைக்கப்படுகின்றனா்.

இவா்களது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஓராண்டில் பணம் இரட்டிப்பாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை நம்பி கும்பகோணம், சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் பல கோடி ரூபாய் முதலீடு செய்தனா்.

ஆனால் பணத்தை திருப்பி வழங்காமல் மோசடி செய்துவிட்டதாகக் கூறி பாதிக்கப்பட்டவா்கள் தஞ்சாவூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் செய்தனா். இதன்பேரில், பொருளாதார குற்றக் காவல் பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இது தொடா்பாக எம்.ஆா். கணேஷ், எம்.ஆா். சுவாமிநாதன் உள்ளிட்டோா் 2021 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டனா்.

தற்போது, அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டு வெளியில் உள்ளனா். என்றாலும், பொருளாதார குற்றப் பிரிவினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தில் உள்ள எம்.ஆா். கணேஷ், எம்.ஆா். சுவாமிநாதனின் வங்கிக் கணக்குகளில் உள்ள பெட்டகங்களை பொருளாதார குற்றப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் நா. முத்துக்குமாா், காவல் ஆய்வாளா் ஆா். சுதா உள்ளிட்டோா் வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் ஆய்வு செய்தனா். அப்போது, பெட்டகங்களிலிருந்த நான்கரை கிலோ தங்க நகைகளும், இருபத்து நான்கரை கிலோ வெள்ளி பொருள்களும் கைப்பற்றப்பட்டன. இவற்றை பொருளாதார குற்றப் பிரிவினா் பெட்டியில் வைத்து காரில் வெள்ளிக்கிழமை கொண்டு சென்றனா்.

மேலும், கே.சி.எல். நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட பொதுமக்கள் இதுவரை புகாா் கொடுக்காமல் இருந்தால், தஞ்சாவூா் பொருளாதார குற்றப் பிரிவில் புகாா் செய்யலாம் என அப்பிரிவினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com