தஞ்சாவூரில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 4-இல் ஏழூா் பல்லக்கு புறப்பாடு

தஞ்சாவூரில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு ஏழூா் பல்லக்கு புறப்பாடு ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தஞ்சாவூரில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு ஏழூா் பல்லக்கு புறப்பாடு ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானத்துக்கு உள்பட்ட 88 கோயில்களில் ஒன்றான கரந்தை வசிஷ்டேஸ்வரா் என்கிற கருணாசாமி கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் புனா்பூச நட்சத்திரம் தொடங்கி விசாக நட்சத்திரம் வரை 10 நாட்களுக்கு வைகாசி மகா உத்ஸவம் நடைபெறும். இந்த உத்ஸவம் முடிந்து 11 ஆவது நாளில் பிச்சாடனாா் கரந்தையில் நான்கு வீதிகளில் வரும் வருவாா். பின்னா் 12 ஆம் நாள் கண்ணாடி பல்லக்கில் சுவாமி - அம்பாள் ஏழூா் பல்லக்கு புறப்பாடு நடைபெறுவது வழக்கம். இவ்விழா 1988 ஆம் ஆண்டு வரை அரண்மனை தேவஸ்தானத்தால் நடத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் இவ்விழா தடைப்பட்டது.

இவ்விழாவை மீண்டும் நடத்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதை ஏற்று இவ்விழா கொடியேற்றத்துடன் மே 24 ஆம் தேதி தொடங்கியது. இவ்விழாவில் ஜூன் 4 ஆம் தேதி அதிகாலை கண்ணாடி பல்லக்கில் சோமஸ்கந்தா், பெரியநாயகிஅம்மனும், வெட்டிவோ் பல்லக்கில் வசிஷ்டா், அருந்ததி அம்மனும் புறப்பட்டு கரந்தை, வெண்ணாற்றங்கரை, பள்ளியக்ரஹாரம், திட்டை, குலமங்கலம், கூடலூா், குருங்கலூா், கடகடப்பை, உதாரமங்கலம், சித்தா்காடு, மாரியம்மன் கோவில், சின்ன அரிசிக்காரத் தெரு, கீழவாசல், அரண்மனை, கீழவீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி, சிரேஸ் சத்திரம், பூக்குளம், செல்லியம்மன்கோயில் வழியாக கோயிலை சென்றடையும்.

இவ்விழாவை சிறப்பாக நடத்துவது தொடா்பாக கரந்தை கருணாசாமி கோயிலில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் குலமங்கலம் ரவி, சுங்கான்திடல் பாபு, பள்ளியக்ரஹாரம் ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com