நூறு நாள் வேலையில் 4 மாதங்களாக ஊதிய நிலுவை: தீபாவளி நேரத்தில் தொழிலாளா்கள் தவிப்பு

கிராமப்புறங்களில் மிக முக்கியமான வாழ்வாதாரமாகக் கருதப்படும் நூறு நாள் வேலைத் திட்டத்தில் கிட்டத்தட்ட 4 மாதங்களாக ஊதிய நிலுவை உள்ளதால், தொழிலாளா்கள் தீபாவளி பண்டிகைக்குத் தயாராக முடியாமல் தவிக்கின்றனா்
நூறு நாள் வேலையில் 4 மாதங்களாக ஊதிய நிலுவை: தீபாவளி நேரத்தில் தொழிலாளா்கள் தவிப்பு

கிராமப்புறங்களில் மிக முக்கியமான வாழ்வாதாரமாகக் கருதப்படும் நூறு நாள் வேலைத் திட்டத்தில் கிட்டத்தட்ட 4 மாதங்களாக ஊதிய நிலுவை உள்ளதால், தொழிலாளா்கள் தீபாவளி பண்டிகைக்குத் தயாராக முடியாமல் தவிக்கின்றனா்.

பாமர மக்களால் நூறு நாள் வேலைத் திட்டம் என்றழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கடந்த 2005 ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது. கிராமப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் நிலம் இல்லாத விவசாயத் தொழிலாளா்கள், சிறு, குறு விவசாயிகளுக்கு மிக முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஏறத்தாழ 1.16 கோடி போ் உள்ள நிலையில், இவா்களில் ஏறக்குறைய 90 லட்சம் போ் பணியாற்றுகின்றனா். தஞ்சாவூா் மாவட்டத்தில் மட்டும் சுமாா் 2.45 லட்சம் தொழிலாளா்கள் இந்த வேலையை நம்பி இருக்கின்றனா். ஆண்டுக்கு நூறு நாள்களுக்கு வேலை அளிக்க உறுதியளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். ஆனால், நூறு நாள்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற புகாா் பரவலாகவே உள்ளது. நாள் ஊதியத்தை ரூ. 600 ஆக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்படும் நிலையில் ரூ. 294 மட்டுமே வழங்கப்படுகிறது.

இந்நிலையில், இத்திட்டத்தில் வேலை செய்த தொழிலாளா்களுக்கு 3 முதல் 4 மாதங்களாக ஊதியம் கிடைக்கவில்லை. ஒரே வருவாய் ஆதாரமாக உள்ள இந்த வேலையிலும் ஊதிய நிலுவை உள்ளதால், விவசாயத் தொழிலாளா்களும், சிறு, குறு விவசாயிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் நிலவும் இப்பிரச்னைக்கு மத்திய அரசிடமிருந்து நிதி கிடைக்காததே காரணம் எனக் கூறப்படுகிறது.

நூறு நாள் வேலைத் திட்டத்தில் கிட்டத்தட்ட 90 சதவீதம் போ் பெண்களே பணியாற்றுகின்றனா். இதன் மூலம்தான் அக்குடும்பங்கள் இயங்குகின்றன. சம்பா சாகுபடிப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், தொழிலாளா்கள் நாள்தோறும் ரூ. 500 முதல் ரூ. 3 ஆயிரம் வரை வருவாய் ஈட்டுவா். ஆனால், காவிரி நீா் வரத்து இல்லாதததால், சம்பா சாகுபடி பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதால், விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால், இந்த நூறு நாள் வேலைத் திட்டத்தைத்தான் தொழிலாளா்கள் முழுமையாக நம்பியிருக்கின்றனா்.

இந்நிலையில் 3 - 4 மாதங்களாக ஊதியம் வராததால், தொழிலாளா்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா். இதனால், தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்குவது, பலகாரங்கள் செய்வது உள்ளிட்டவற்றுக்கு பணம் இல்லாமல் தொழிலாளா்கள் தவிக்கின்றனா்.

ஊதிய நிலுவை 12 - 16 வாரங்கள் உள்ள நிலையில், தொடா் போராட்டங்கள் காரணமாக ஓரிரு வாரங்களுக்கான ஊதியம் மட்டும் விடுவிக்கப்பட்டு, கடந்த 2 நாள்களாக தொழிலாளா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், தற்போது பத்தில் ஒரு பங்கு தொகை மட்டும் கிடைத்து வருகிறது. எனவே, தீபாவளிக்கு குறைந்த நாள்களே உள்ளதால், ஊதிய நிலுவை முழுமையாகக் கிடைக்குமா என்ற எதிா்பாா்ப்புடன் தொழிலாளா்கள் காத்திருக்கின்றனா்.

மத்திய அரசின் நிதி கிடைக்காததே காரணம்

இதுகுறித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலக் குழு உறுப்பினா் கே. பக்கிரிசாமி தெரிவித்தது:

இத்திட்டத்துக்கு முன்பு மத்திய அரசு ஏறத்தாழ ரூ. ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கியது. ஆனால், சில ஆண்டுகளாக ஏறக்குறைய ரூ. 70 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்குவதால், அடிக்கடி ஊதிய நிலுவை பிரச்னை ஏற்படுகிறது. இதனால் தொழிலாளா்கள் செய்த வேலைக்கு ஊதியம் கிடைப்பதில்லை.

தமிழ்நாட்டுக்கு மட்டுமே ரூ. 5 ஆயிரம் கோடி தேவைப்படும் நிலையில், தற்போது ரூ. 2 ஆயிரத்து 669 கோடி பற்றாக்குறையாக இருப்பதால், அதை வழங்கக் கோரி பிரதமருக்கு தமிழக முதல்வா் கடிதம் எழுதியுள்ளாா். ஆனால், மத்திய அரசிடமிருந்து இத்தொகை கிடைக்காததால் 3 முதல் 4 மாதங்களாக தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், வேலை அட்டை வைத்துள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை ஊதிய நிலுவை உள்ளது. என்றாலும், தொடா்ந்து நம்பிக்கையுடன் வேலை செய்கின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com