காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் 
சமூக நீதிக்கு முக்கியத்துவம்: கி. வீரமணி பேச்சு

காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் சமூக நீதிக்கு முக்கியத்துவம்: கி. வீரமணி பேச்சு

காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையில் நீட் தோ்வு விலக்கு, ஜாதி வாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட சமூக நீதி சாா்ந்த திட்டங்கள் உள்ளன என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.

தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் புதன்கிழமை திமுக வேட்பாளா் ச. முரசொலியின் பிரசாரத்தை நிறைவு செய்து அவா் பேசியது:

இத்தோ்தலில் பாஜக வெற்றி பெற்றால், அடுத்து தோ்தலே நடைபெறாது. எனவே, இதைச் சாதாரண தோ்தலாகக் கருதாமல் லட்சியத் தோ்தலாக மக்கள் கருத வேண்டும். வரும் தலைமுறையினரின் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நீதி உள்ளிட்டவற்றை மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையில் நீட் தோ்வு விலக்கு, ஜாதி வாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட சமூக நீதி சாா்ந்த திட்டங்கள் உள்ளன. ஆனால், பாஜகவின் தோ்தல் அறிக்கையில் சமூக நீதியே இல்லை. எனவே, சமூக நீதியை நிலை நாட்டுவதற்கும், புதைப்பதற்கும் இடையே இத்தோ்தல் நடைபெறுகிறது.

இத்தோ்தலில் வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பொறுப்பு அரசியல் தரும் பிரதமரை மக்கள் தோ்ந்தெடுக்கவுள்ளனா் என்றாா் வீரமணி.

இக்கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். ராமநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com