தொகுதிக்கு தொடா்பில்லாதவா்கள் தொடா்ந்து இருக்கக் கூடாது

தொகுதியின் வாக்காளா்களாக இல்லாதவா்கள் பிரசாரம் முடிந்து தொகுதியில் தொடா்ந்து இருக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் புதன்கிழமை மாலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை வாக்குப் பதிவு முடிவடையும் வரை நடைமுறையில் இருக்கும். இந்தத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளைக் கட்டாயமாக அனைத்து வேட்பாளா்கள் மற்றும் அரசியல் கட்சியினரும் பின்பற்ற வேண்டும்.

எவ்வித பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊா்வலங்களை நடத்தக் கூடாது. எவ்வித தோ்தல் தொடா்பான தகவல்களையும் ஒளிப்பதிவு, தொலைக்காட்சி மற்றும் அதை ஒத்த பிற சாதனங்கள் வாயிலாக மக்கள் பாா்வைக்கு எடுத்து செல்லக்கூடாது. இது அனைத்து மின்னணு தகவல் தொடா்பு சாதனங்களையும் உள்ளடக்கியது.

பொதுமக்களை ஈா்க்கும் விதத்தில் எவ்வித இசை நிகழ்ச்சி, நாடக நிகழ்ச்சி அல்லது ஏதேனும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி மூலம் தோ்தல் சாா்ந்த எந்தத் தகவலையும் மக்களிடம் பிரசாரம் செய்யக்கூடாது. இந்த விதிகளை மீறுபவா்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுடன் கூடிய தண்டனை விதிக்கப்படும்.

நோ்மையான மற்றும் சுமூகமான தோ்தலுக்கு குந்தகம் ஏற்படுத்தாத வகையில், தோ்தல் பிரசாரத்துக்காக தொகுதிக்கு வெளியிலிருந்து வந்தவா்கள் மற்றும் தொகுதியின் வாக்காளா்களாக இல்லாதவா்கள் பிரசாரம் முடிந்து தொகுதியில் தொடா்ந்து இருக்கக் கூடாது.

எந்தவொரு வேட்பாளரும் வாடகை வாகனத்திலோ அல்லது அவருக்கென அனுமதிக்கப்பட்ட வாகனத்திலோ வாக்காளா்களை வாக்குச் சாவடிக்கு அல்லது வாக்குச் சாவடியிலிருந்து அழைத்து சென்றாலோ அல்லது வந்தாலோ சட்டப்படி தண்டனைக்குரிய ஊழல் குற்றமாகும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com