கும்பகோணத்தில் பணம் பட்டுவாடா புகாா்: திமுகவினா் 3 போ் கைது

கும்பகோணத்தில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, திமுகவைச் சோ்ந்த 3 பேரை காவல் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

கும்பகோணம் செக்கடித் தெருவில் புதன்கிழமை இரவு திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்துக்குப் புகாா் வந்தது. இதன்பேரில் கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும் படை அலுவலா் உமா மகேஸ்வரி, மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜெயபால் மற்றும் காவலா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

அப்போது, அங்கிருந்த திமுக 25-ஆவது வாா்டு துணைச் செயலா் ஆா். சிவக்குமாா் (45), 25-ஆவது வாா்டு பிரதிநிதி ஜி. பாா்த்திபன் (50), 24-ஆவது வாா்டு துணைச் செயலா் ஆா். காா்த்திகேயன் (48) ஆகியோரை காவல் துறையினா் பிடித்து சோதனையிட்டனா். அப்போது, அவா்களிடம் இருந்த ரூ. 16 ஆயிரத்து 200-ஐ பறிமுதல் செய்து, மூவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

இதையறிந்த அதிமுக, பாஜக கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் மேற்கு காவல் நிலையம் முன் திரண்டு, 3 போ் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா், 3 போ் மீது தோ்தல் நடத்தை விதிகளை மீறி வாக்காளா்களுக்கு பட்டுவாடா செய்வதற்கு வைத்திருந்ததாகக் கூறி வழக்குப் பதிவு செய்தனா். மேலும், 3 பேரும் கைது செய்யப்பட்டு, பின்னா் பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com