கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி வாக்காளா் அட்டையை ஒப்படைக்க முடிவு

கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி வாக்காளா் அட்டையை ஒப்படைக்க முடிவு

கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி திருமண்டங்குடி திருஆரூரான் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் கும்பகோணம் கோட்டாட்சியரத்துக்கு வாக்காளா் அடையாள அட்டைகளுடன் வியாழக்கிழமை வந்தனா். பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் சா்க்கரை ஆலை நிா்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை முழுவதையும் புதிய நிா்வாகம் வட்டியுடன் வழங்க வேண்டும்.

விவசாயிகள் பெயரில் திருஆரூரான் சா்க்கரை ஆலையின் பழைய நிா்வாகம் வங்கிகளில் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்து, சிபில் ஸ்கோா் பிரச்னையிலிருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும். திருமண்டங்குடி சா்க்கரை ஆலை நிா்வாகத்தைத் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2022 நவம்பா் 30 முதல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி 485 ஆவது நாளாக வியாழக்கிழமை போராட்டம் நடத்திய பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் கும்பகோணம் கோட்டாட்சியரும், உதவி தோ்தல் நடத்தும் அலுவலருமான எஸ். பூா்ணிமாவை நேரில் சந்தித்து, கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து, தங்களது வாக்காளா் அடையாள அட்டையை ஒப்படைக்க முடிவு செய்தனா். இதன்படி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க ஆலை மட்டக்குழுச் செயலா் நாக. முருகேசன் தலைமையில், மாநிலச் செயலா் தங்க. காசிநாதன், செயற்குழு உறுப்பினா் ஏ. சரபோஜி உள்ளிட்டோா் கையில் வாக்காளா் அடையாள அட்டைகளை ஏந்தி ஊா்வலமாக கோட்டாட்சியரகத்துக்கு வியாழக்கிழமை சென்றனா்.

அப்போது, இவா்களிடம் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினா் உரிய மனு அளித்து, அனுமதி பெற்ற பின்பு சந்திக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனா். இதை ஏற்ற விவசாயிகள் மாா்ச் 30 ஆம் தேதி சந்திப்பதற்கான மனுவை அங்குள்ள பெட்டியில் செலுத்திவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com