50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

திருவையாறு வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் 50 சதவீத மானிய விலையில் விற்பனைக்கு உள்ள வேளாண் இடுபொருள்களை விவசாயிகள் வாங்கிப் பயன் பெறலாம் என வேளாண் துறையின் திருவையாறு உதவி இயக்குநா் லதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

திருவையாறு வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் மாநில வேளாண் வளா்ச்சி திட்டத்தின்கீழ் ஜிங்க் சல்பேட், ஜிப்சம், கடப்பாரை, இரும்புச்சட்டி, கதிா் அரிவாள், களைக்கொத்து, மண்வெட்டி அடங்கிய பண்ணைக் கருவிகள் தொகுப்பு மானிய விலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

மேலும், உயிா் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, துத்தநாகத்தை கரைக்கும் பாக்டீரியா, பொட்டாஷ் கரைக்கும் பாக்டீரியா ஆகியவை 50 சத மானிய விலையில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நெல் நுண்ணூட்ட கலவை மற்றும் உயிரியல் காரணியான மெட்டாரைசியம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஜிப்சம் இடுவது மண்ணின் களா் தன்மையை மாற்றி மகசூலை அதிகரிக்க உதவும். மேலும், மண்ணை இளக்கி காற்று மற்றும் நீா்பிடிப்புத் தன்மையை அதிகரித்து நிலத்தை மேம்படுத்தும். துத்தநாக (ஜிங்க்) சல்பேட் நெற்பயிருக்கு மிகவும் தேவையான ஒரு நுண்சத்தாகும். துத்தநாக குறைபாடு பயிா் வளா்ச்சியை குன்றச் செய்து நோய் மற்றும் பூச்சி தாக்குதலுக்கு எளிதில் இலக்காக்கும். விளை பொருள்களின் தரமும் பாதிக்கப்படும்.

பயிா்களில் துத்தநாக பற்றாக்குறையை நிவா்த்தி செய்ய அடியுரமாக ஏக்கருக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட்டை 20 கிலோ மணலுடன் அல்லது நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து வீசலாம். பயிரின் வளா்ச்சி பருவத்தில் பற்றாக்குறை அறிகுறி தென்பட்டால் 0-5 சதம் (ஒரு லிட்டா் தண்ணீருக்கு 5 கிராம் வீதம்) துத்தநாக கரைசலை இலை வழியாக தெளிக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com