மகளிா் உரிமைத் தொகை திட்டம் 4.17 லட்சம் குடும்பத்தினா் பயன்

தஞ்சாவூா், மே 9: தஞ்சாவூா் மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் 4.17 லட்சம் குடும்பத் தலைவிகள் பயன்பெற்றுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக முதல்வராக ஸ்டாலின் 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற நாளில் கையொப்பமிட்ட ஐந்து திட்டங்களில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம், ஆவின் பால் விலை குறைப்பு, தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தனித் துறை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இதில், விடியல் பயணத் திட்டத்தில் மாநில அளவில் அரசுப் பேருந்துகளில் அனைத்து மகளிா், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோா் கட்டணமில்லாமல் 445 கோடி முறை பயணம் செய்து மாதந்தோறும் ரூ. 888 வரை சேமித்து வருகின்றனா். இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 14.89 கோடி முறை பயணம் செய்து மகளிா், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோா் பயன் பெற்றுள்ளனா்.

கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு உரிய விதிமுறைகளைப் பின்பற்றி மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவா்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 1 கோடியே 15 லட்சம் குடும்பத் தலைவிகள் பயனடைந்துள்ளனா். இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 4 லட்சத்து 17 ஆயிரத்து 999 குடும்பத் தலைவிகள் பயன் பெற்றுள்ளனா்.

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் நகா்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 18.5 லட்சம் மாணவா்கள் பயனடைகின்றனா். இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 56 ஆயிரத்து 23 மாணவா்கள் பயன் பெற்றுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com