திருச்சி அருகே 11-ம் நூற்றாண்டு வணிகக் குழுக் கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருச்சி, மே 26: திருச்சி அருகே 11 ஆம் நூற்றாண்டு கால தென்னிந்திய வணிகக் குழுக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  திருச்சி -மதுரை நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சியிலிருந்து பாலக்குறிச்ச
Published on
Updated on
2 min read

திருச்சி, மே 26: திருச்சி அருகே 11 ஆம் நூற்றாண்டு கால தென்னிந்திய வணிகக் குழுக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 திருச்சி -மதுரை நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சியிலிருந்து பாலக்குறிச்சிக்குப் பிரியும் பாதையில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலம்பட்டிக் காட்டுக்குள் இந்தக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

 சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் மு. நளினியின் வழிகாட்டலில் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்கள் இந்தக் கல்வெட்டைப் படித்து படியெடுத்தனர்.

 துவரங்குறிச்சி நகர் மன்ற முன்னாள் தலைவர் கு. ஆறுமுகம், மருங்காபுரி ஒன்றிய இசை வேளாளர் சங்கத் தலைவர் ஆர்.எம். சேதுராமன் ஆகியோரது அழைப்பின் பேரில், துவரங்குறிச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டபோது, இந்தக் கல்வெட்டுப் படித்து அறியப்பட்டது என டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன் தெரிவித்தார்.

 இதுபற்றி அவர் மேலும் தெரிவித்தது:

 "தார்ச் சாலையிலிருந்து தச்சமலை சார்ந்த காட்டுப் பகுதிக்குள் ஏறத்தாழ ஒரு கிலோ மீட்டர் தொலைவு சென்றால், இந்தக் கல்வெட்டு இருக்கும் இடத்தை அடையலாம்.

 உள்ளூர் மக்களால், "நட்ட கல்லு அய்யனாராக' வழிபடப்படும் கல்வெட்டுள்ள இந்தப் பலகைக் கல்லுக்கு ஆண்டுதோறும் பூசை படையலுடன் பெரிய அளவில் விழா எடுக்கப்படும் என உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

 மண்ணில் புதையுண்ட நிலையில், ஏறத்தாழ நான்கரை அடி உயரமுள்ள இந்தக் கருங்கல் பலகைக் கல்லின் நாற்புறத்தும் எழுத்துக்கள் ஆழமாக வெட்டப்பட்டுள்ளன. 88 வரிகளில் அமைந்துள்ள இந்த ஆவணத்தை ஐயபொழில் பரமேசுவரியின் மக்களாகத் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் திசையாயிரத்து ஐநூற்றுவரில் கொடும்பாளூரைச் சேர்ந்த வீரபட்டனம் குழுவினரும், மதுரை அடிக்கிட்டனம் குழுவினரும் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

 வணிகப் பொருள்களோடு பெரு வழிகளில் செல்லும்போது, கொள்ளையர்களிடமிருந்து தங்களையும் வணிகப் பொருள்களையும் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தென்னக வணிகக் குழுக்கள் தங்களுக்கென காவல் படை அமைப்புகளைக் கொண்டிருந்தன.

 இத்தகைய படைகளில் பணியாற்றியவர்கள் பல்வேறு வீரர் குழுக்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். வேளைக்காறர், கவறைகள், கண்டழி, கண்டச்செட்டி, சிங்கம், வலங்கை, வீரர் என ஏழு குழுக்களைச் சேர்ந்த வீரர்கள் மலம்பட்டிக் கல்வெட்டில் இடம் பெறுகின்றனர்.

 இவர்களில் கவறைகள், கண்டழி என்ற குழுக்களைச் சேர்ந்த வீரர்களே எண்ணிக்கையில் மிகுதியாக உள்ளனர். தசமடிக் கவறைகள், கொங்கு மண்டலக் கவறைகள் எனக் கவறைகள் இரு பிரிவுகளாக இருந்தனர். இந்த வீரர் கூட்டங்களை "நம் மக்கள்' என வணிகக் குழுக்கள் குறிப்பிடுகின்றன.

 திசையாயிரத்து ஐநூற்றுவருக்குத் தொடர்ந்து தொல்லை தந்த இருவரை வணிகக் குழு வீரர்கள் கொன்றழித்த தகவலை மலம்பட்டிக் கல்வெட்டு தருகிறது. வீரன் நாடாள்வான் என்பவரைக் கொன்றவர்களாக எட்டு வீரர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

 இவர்களில் 3 பேர் இராஜராஜர், இராஜேந்திரர் பெயர்களைத் தம் பெயர்களின் முன்னொட்டுக்களாகக் கொண்டுள்ளனர். அகப்பிஞ்சி என்பவரைக் கொன்றவர்களாகப் பதினான்கு வீரர்களின் பெயர்கள் தரப் பெற்றுள்ளன. இவர்களில் கவறைகளும் கண்டழியும் கூடுதலாக உள்ளனர்.

 வீரச் செயல் நடந்த வணிக ஊரைப் பெருமைப்படுத்தும் விதமாக ஐநூற்றுவர் அதை வீரதாவளமாக அறிவித்தனர். வீரப்போரில் இறந்தவராக ஊகிக்கத்தக்க கவறை உய்யகொண்டானின் குடும்பத்துக்கு வயல், குளம் அளித்துள்ளனர். அந்த வயலை வீரகள் வேளைகாறனான வீரகள் மதலை உழுது, உரிமையாளர்களுக்கு உரியன தந்து தாமும் அனுபவித்துக் கொள்ள வழியமைத்தனர். ஊரில் இருந்த அம்பலத்தை மெழுக வாய்ப்பாகக் கவறை விடங்கனுக்கு மெழுக்குப்புறமாக நிலத்துண்டும், "பாவாடையாக'த் துணியும் அளித்தனர்.

 கி.பி. 11 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் விளங்கும் இந்தக் கல்வெட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. வணிகச் சாத்துகளைக் காவல் காத்துச் சென்ற வீரர் குழுக்களின் சமுதாய நடவடிக்கைகளையும், அவர்களுடைய பண்பாட்டு நம்பிக்கைகளையும் விளக்கக்கூடிய இதுபோன்ற கல்வெட்டுகள் மிகக் குறைவான அளவிலேயே கிடைத்துள்ளன.

 தாத்தையங்கார்பேட்டை அருகே இதுபோன்ற கல்வெட்டு ஒன்றை டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் கண்டறிந்து வெளிப்படுத்தியது.

 நத்தம், திண்டுக்கல், சிங்களாந்தகபுரம், கோவில்பட்டி ஆகிய ஊர்களிலும் இலங்கையின் சில பகுதிகளிலும் வீரத்தளம், வீரத்தாவளம் தொடர்பான வணிகக் குழுக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து ஆராய்ந்தால், சோழர் கால வணிகர் சமுதாயம் குறித்துப் பல அரிய செய்திகள் தெரிய வரும்' என்றார் கலைக்கோவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com