திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் குடமுழுக்கு

திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமானசுவாமி கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடமுழுக்கில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமானசுவாமி கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடமுழுக்கில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தென் கயிலாயம் எனப் போற்றப்படும் இக்கோயிலில் கடந்த 2000-ஆவது ஆண்டு குடமுழுக்கு நடைபெற்ற நிலையில், மீண்டும் குடமுழுக்கு நடத்தும் வகையில், கடந்த 2013-ம் ஆண்டில் திருப்பணிகள் தொடங்கப்பட்டது. ரூ. 2 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டன. இதையடுத்து, டிசம்பர் 6-ம் தேதி குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, தாயுமானசுவாமி சன்னதி, மாணிக்க விநாயகர் சன்னதி ஆகிய இரு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலை மண்டபங்களில் கடந்த 2-ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி, சனிக்கிழமை இரவு வரை 7 கால பூஜைகள் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணிக்கு எட்டாம் கால யாக சாலை பூஜை, விசேஷ திரவிய ஹோமம், காலை 6 மணிக்கு பரிவார யாக பூர்ணாஹுதி, காலை 6.30 மணிக்கு தத்வார்ச்சனை பூஜை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, காலை 7.30 மணிக்கு பிரதான யாகம், மகா பூர்ணாஹுதி பூஜைகளுக்குப் பிறகு, தாயுமானசுவாமி சன்னதி, மாணிக்க விநாயகர் சன்னதியில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலை மண்டபங்களிலிருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.

மலைக்கோட்டை நுழைவுவாயில் ராஜகோபுரம், தாயுமானசுவாமி சன்னதி ராஜகோபுரம், உச்சிப்பிள்ளையார் சன்னதி தங்க விமானம், தாயுமானசுவாமி சன்னதி தங்க விமான கோபுரங்கள், மட்டுவார் குழலம்மை அம்மன் சன்னதி கோபுரம், மாணிக்க விநாயகர் சன்னதி கோபுரம் மற்றும் 19 உப சன்னதிகளுக்கு கடங்கள் காலை 8 மணிக்குச் சென்றடைந்தன.

அங்கு சிவாச்சாரியர்கள் சிறப்பு பூஜைகள் நடத்திய பிறகு, காலை 8.35 மணிக்கு ராஜகோபுரங்கள், விமான கோபுரங்கள் கலசங்களுக்கு ஒரே நேரத்தில் சிவாச்சாரியர்கள் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கை நடத்தினர். தொடர்ந்து, மூலவர் மகா குடமுழுக்கும், உப சன்னதிகளின் குடமுழுக்கும் நடைபெற்றது.

கஞ்சனூர் ஆர். நீலகண்ட குருக்கள் தலைமையில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி சன்னதி கோயில் சிவாச்சாரியர்கள் குடமுழுக்கை நடத்தினர். குடமுழுக்கு நடைபெற்ற பிறகு, அனைத்து சன்னதிகளிலும் தீபாராதனைகள் காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் மகா அபிஷேகமும், பஞ்சமூர்த்திகளின் திருவீதியுலாவும் நடைபெற்றது.

குடமுழுக்கு நடைபெற்ற சிறிது நேரத்திலேயே மழை பெய்யத் தொடங்கியது. எனினும், கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

குடமுழுக்கு விழாவில் மாநில கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் டி.பி. பூனாட்சி, தலைமைக் கொறடா ஆர். மனோகரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் த. இந்திராகாந்தி, சீ. வளர்மதி, துணை மேயர் ஜெ. சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் க. தர்ப்பகராஜ், மலைக்கோட்டை மௌனமடம் கட்டளை விசாரணை ஸ்ரீமத் குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், இணை ஆணையர்கள் க. தென்னரசு, கல்யாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குடமுழுக்கு ஏற்பாடுகளை மலைக்கோட்டை கோயில் உதவி ஆணையர் நா. சுரேஷ் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர். மாநகரக் காவல் துணை ஆணையர் சசிமோகன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com