ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

திருச்சி அருகே சூளுரைக் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

திருச்சி மாவட்டம், திருச்செந்துறையில்  சூளுரைக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Updated On :23 ஜூலை 2018, 8:44 am IST

திருச்சி மாவட்டம், திருச்செந்துறையில்  சூளுரைக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருச்சி மா.ராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் இயக்குநர் மருத்துவர் இரா.கலைக்கோவன்  ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி-கரூர் சாலையிலுள்ள திருச்செந்துறை சந்திரசேகரர் கோயில் முற்சோழர் காலத்தில் அரிஞ்சயசோழரின் தேவியும், கொடும்பாளூர் இளவரசியுமான  பூதிஆதித்தபிடாரியால் கட்டப்பட்ட கற்றளியாகும். இக்கோயிலில் முசிறி அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியை அர. அகிலா,  திருச்சி சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் மு. நளினி கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர். இக்கோயிலின் வெளிச்சுற்றின் வடக்குப்பகுதியில் உள்ள மண்டபத்தின் சுவர்களிலும், மண்மேட்டிருந்த கீழ்ப்பகுதியிலும் இந்த கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
பல திருப்பணிகள் காரணமாகத் துண்டுகளாகச் சிதறியுள்ள பிற்சோழர் காலக் கல்வெட்டுகள்இரண்டு,  மீகாமன் என்னும் சிற்றரசரிடம் பணியாற்றியுள்ள கைக்கோள வீரர்கள் இருவரின் வீரச்சூளுரைகளைப் பதிவு செய்துள்ளன. 
அரசர் மீகாமனின் மெய்க்காவலராகப் பொதுக்காலம் 12 ஆம் நூற்றாண்டில் பொறுப்பேற்ற அம்மையாழ்வான் திருப்பிலாமாராயனான அழகியசேமன்,  அரசர் உயிரைக் காப்பாற்ற முடியாமல் வாழ நேர்ந்தால், தன் உடன் பிறந்தாளான குணச்சாளுக்குத் தான் கணவனாவது எத்தனை இழிவானதோ, அத்தகு இழிவு தனக்கு உண்டாகட்டும் என்று திருச்செந்துறைக் கோயில் இறைவன் முன்பு சூளுரைத்தார். 
இதற்கு உறுதியேற்றவர்கள் தங்களது வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாத நிலையில், சமூகத்தால் ஏற்கப்படாத, இழிவாகக் கருதப்படும் தவறான உறவுகளைக் கொண்டிருப்பாருக்கு இணையாகவே கருதப்படுவர் என்பதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது.
இதே போன்றதொரு செய்தியைத் தரும் மற்றொரு கல்வெட்டு  இக்கோயிலில் பணியாற்றிய  தேவரடியாள் ஆழ்வியை அறிமுகப்படுத்துகிறது.  இக்கோயிலில் பல கல்வெட்டுகள் பதிவாகியிருந்தபோதும், கோயில் தேவரடியாரைப் பற்றிப் பேசும் முதல் கல்வெட்டாக இதைக் குறிக்கலாம்.  இக்கோயிலின் தலமரமான பலா இங்குள்ள சோழர் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. 
தலமரத்தின் பெயரைத் தன் பெயரில் ஒரு பகுதியாகச் சூளுரைத்த கைக்கோள வீரர் திருப்பிலாமாராயன்  கொண்டுள்ளமை  குறிப்பிட்டத்தக்கது. 
பொதுக்காலம் 1517-இல் பொறிக்கப்பட்டுள்ள கிருஷ்ணதேவராயரின் வரி விலக்கு கல்வெட்டின் சில பகுதிகள் கிடைத்துள்ளன. 
பெருமண்டத்துக்கு முன்னுள்ள தரையில் பாவப்பட்டுள்ள கல்லில் தில்லைநாயகபட்டன் திருச்செந்துறை  உகந்தடுமை கொண்டான் நம்பி என்பவரின் மகன் முத்துநம்பி இக்கோயிலில் எப்போதும் சேவையிலிருக்கும் செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.  
இந்த கள ஆய்வுக்கு கோயில் சிவாச்சாரியார் மு. சண்முகசுந்தரம்  உள்ளிட்டோர் உறுதுணையாக இருந்தனர். புதிய கல்வெட்டுகள் பற்றி  கல்வெட்டுத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.