திருச்சியில் கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாதெமி தொடக்கம்

திருச்சியில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் கிளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
Updated on
1 min read

திருச்சியில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் கிளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
திருச்சி கோட்டை பழைய ராஜா திரையரங்க வளாகத்தில் அமைந்துள்ள புதிய கிளையை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் விவேக் ஹரிநரைன், எஸ்.எஸ். ஜவஹர் தொடக்கி வைத்தனர்.
தொடர்ந்து விழாவில் விவேக் ஹரிநரைன் பேசியது:
மிகப்பெரிய செல்வந்தர்கள், மெத்தப் படித்தவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் குடிமைப் பணி (சிவில் சர்வீஸ்) தேர்வு எழுதி, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக முடியும் என்பதெல்லாம்  கிடையாது.  1980 - ஆம்ஆண்டு நடைபெற்ற தேர்வில் முதல் ஆறு இடங்களைப் பெற்ற,  குற்றாலிங்கம், வி.கே.சுப்புராஜ், முகமது ஜலால், சிவகாமி உள்ளிட்ட  அனைவரும் கிராமப்புறங்களைச்சேர்ந்த சாமானிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
நாட்டில் பல்வேறு துறைகளிலும் பணியாற்றும் வாய்ப்பும்,  நாட்டின் கடைக்கோடியில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பவரைக் கூட  மேல்நிலைக்கு கொண்டு வரக்கூடிய பணியும் இதுதான்.  அனைத்துத்தரப்பு மக்களுக்கும் இதன்மூலம் சேவையாற்ற முடியும். 
எனவே  கிங்மேக்கர்ஸ் நிறுவனம், அதற்கு உதவும் வகையில் திருச்சியில் கிளையைத் தொடங்கியுள்ளது. திருச்சி சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இதைப் பயன்படுத்திகொள்ள வேண்டும் என்றார்.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.எஸ். ஜவஹர் பேசியது: கடவுள் அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் தனித்திறமையைப் படைத்துள்ளார். உங்களது தனித்திறமையை நீங்கள் முதலில் உணரவேண்டும். வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும், அதே நேரம் வெற்றிபெறவும் வேண்டும். அதாவது சமூக வலைதளங்களைப் பயன்படுத்தலாம். ஆனால், முழு நேரமும் அதில் மூழ்கி வாழ்க்கையைத் தொலைக்கக் கூடாது. நாம் எங்கு விதைக்கப்படுகிறோம் என்பது முக்கியமல்ல, எவ்வாறு முளைக்கிறோம் என்பதுதான் முக்கியம். சாதாரண குடும்பத்தில் சராசரி மாணவனாக தமிழ்ப்பிரிவில்  படித்த நான், எனது தாயார், ஆசிரியர் தூண்டுதலின் பேரில், பின்னர் 12 பதக்கங்களைப் பெற்று முதல் மாணவரானேன். வறுமை, மொழிப்புலமை இல்லை, கிராமம் உள்ளிட்ட உங்களைச் சுற்றியுள்ள செயற்கை தடைச்சுவர்களை உடைத்தெறியுங்கள், அப்போதுதான் வெற்றி பெற முடியும் என்றார். 
விழாவில் கிங் மேக்கர்ஸ் அகாதெமி தலைவர் மற்றும் மேலாண்   இயக்குநர் சத்யஸ்ரீபூமிநாதன், திருச்சி கிளை முதன்மை செயல் அலுவலர் ஸ்ரீகாந்த்,  கிளை மேலாளர் பி. பன்னீர்செல்வம், மற்றும் நிர்வாகிகள் பத்மநாபன், கார்த்திகேயன், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com