திருச்சி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனைக்கு புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநகராட்சிப் பகுதிகளில் தினசரி 61 வார்டுகளிலும், 3 வார்டுகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாளும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மணப்பாறை, துவாக்குடி நகராட்சிகளில் ஒருநாள் விட்டு ஒரு நாளும், துறையூர் நகராட்சியில் 3 நாள்களுக்கு ஒருமுறையும், 16 பேரூராட்சிகள், ஊராட்சிப் பகுதிளிலுள்ள குக்கிராமங்களில் தினமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சி முதல் கிராம ஊராட்சிகள் வரை பல கோடி ரூபாய் மதிப்பில்குடிநீர்ப் பணிளை மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரக மற்றும் நகர் பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக நடைபெறுவதை அலுவலர்கள் முழுமையாகக் கண்காணிக்க வேண்டும்.
ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் அலுவலரை நியமனம் செய்து கண்காணித்திட வேண்டும். குடிநீர் தொடர்பான கோரிக்கைகள், குறைபாடுகள் புகார்களைப் பெற்று நடவடிக்கை எடுத்திட ஒவ்வொரு அலுவலகத்திலும் தனி பதிவேடு பராமரிக்க வேண்டும். அதனடிப்படையில் நடவடிக்கை வேண்டும். அனுமதியின்றி செயல்பாட்டில் இருக்கும் குடிநீர் இணைப்புகளை உடனடியாக துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலும் 15 நாள்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்து தினசரி குளோரினேசன் கலந்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படும் 26 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மூலம் சீரான குடிநீர் விநியோகம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் தற்போது நடைபெற்று வரும் கூட்டுத் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் தொடர்பாக புதிய மின் இணைப்பு பெறும் நிகழ்வுகளில் தமிழ்நாடு மின்சார வாரியம் முன்னுரிமை மற்றும் போர்கால அடிப்படையில் மின் இணைப்பு வழங்கிட வேண்டும்.
குடிநீர் விநியோகம் செய்வதில் தடை ஏற்பட்டாலோ அல்லது குடிநீர் விநியோகம் செய்வதில் பிரச்னை ஏதும் இருந்தாலோ,அது குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அறைக்கு பொதுமக்கள் 18004254851 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.