நாட்டை தாங்கிப்பிடிக்கும் சக்தி இளைஞர்களிடம் உள்ளது
By DIN | Published On : 01st April 2019 09:16 AM | Last Updated : 01st April 2019 09:16 AM | அ+அ அ- |

இந்தியாவை தாங்கிப்பிடிக்கும் சக்தி இளைஞர்களிடம் தான் உள்ளது என்றார் பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளர் க. கோபிநாத்.
திருச்சி எம்.ஐ.இ.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுகிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று,426 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி மேலும் அவர் பேசியது:
கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவுடன் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் இருந்தாலும், மனதுக்கு எது சரியென்று படுகிறதோ அத்துறையைத் தேர்ந்தெடுத்து சாதிக்க முயற்சிக்க வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் இலக்கை அடையத் திட்டமிட்டாலும் , அதை செயல்படுத்துவது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்தியாவை தாங்கிப்பிடிக்கும் சக்தியாக இளைஞர்கள் உள்ளதால், உலக நாடுகள் வியக்கும் அளவுக்கு தனது செயல்பாட்டை மேம்படுத்த வேண்டும். வாழ்க்கையில் வீழ்ந்து கிடப்பது பாவம். எழுந்து நின்று போட்டி போட வேண்டும். வாழ்க்கையில் உயரக் காரணமானவர்களை என்றைக்கும் மறக்ககூடாது. குறிப்பாக பெற்றோருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றார் கோபிநாத். பட்டமளிப்பு விழாவுக்கு கல்லூரித் தாளாளர் ஏ.முகமது யூனுஸ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜே.அந்தோனிராஜ் முன்னிலை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரித்துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர்.