திருச்சி விமான நிலையத்தில் தங்கம், கரன்சிகள் பறிமுதல்
By DIN | Published On : 11th April 2019 08:31 AM | Last Updated : 11th April 2019 08:31 AM | அ+அ அ- |

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 19 லட்சம் தங்க நகைகள், மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ. 1.77 லட்சம் மதிப்புடைய கரன்சிகளை சுங்கத்துறையினர் திருச்சியில் புதன்கிழமை பறிமுதல் செய்தனர் .
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து புதன்கிழமை அதிகாலை திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினர் சோதனையிட்டனர்.
அப்போது சென்னை ரியாஸ், ரிஸ்வான், ஷெரீப், திருச்சி சரவணன் ஆகியோர் உரிய அனுமதியில்லாமலும், முறைகேடாகவும் ரூ.19 லட்சம் மதிப்பிலான 600 கிராம் தங்க நகைகள் எடுத்து வந்தது தெரிய வந்தது.இதுபோல, திருச்சியிலிருந்து கோலாலம்பூருக்கு புதன்கிழமை காலை செல்லவிருந்த மலிண்டோ விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணிகளின் உடைமைகள் சோதனையிட்டப்பட்டன.
அப்போது, ராமநாதபுரத்தைச் சேர்ந்த சையது அபுதாகீர், 2000 பவுண்ட் வெளிநாட்டு கரன்சிகளை ( இந்திய மதிப்பில் ரூ.1.77 லட்சம்) அனுமதியில்லாமல் முறைகேடாக கொண்டு செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து தங்க நகைகள், வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்த வான் நுண்ணறிவுப் பிரிவினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.