திருவானைக்கா கோயிலுக்கு புதிய தங்கக்கொடிமரம்
By DIN | Published On : 11th April 2019 08:32 AM | Last Updated : 11th April 2019 08:32 AM | அ+அ அ- |

திருவானைக்கா அருள்மிகு சம்புகேசுவரர் திருக்கோயிலில், அகிலாண்டேசுவரி அம்மன் சன்னதி எதிரே புதிய தங்கக்கொடி மரம் வைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் 2018, டிச.12 ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட்ட நிலையில், பல்வேறு புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பணியாக, அகிலாண்டேசுவரி அம்மன் சன்னதி எதிர்ப் பகுதியில் பல ஆண்டுகளாக இருந்த தாமிரத் தகடுடன்கூடிய கொடிமரம், தங்கக்கொடிமரமாக மாற்றப்பட்டுள்ளது.
கொடிமரத்தில் தங்கத்தகட்டை பதிக்கும் பணி புதன்கிழமை மாலை நகைசரிபார்ப்பு உதவி ஆணையர் சுரேஷ் முன்னிலையில், கோயில் உதவி ஆணையர் கோ. ஜெயப்பிரியா மேற்பார்வையில் நடைபெற்றது.
26 அடி உயரமுடைய இந்த கொடிமரம், தற்போது 140 கிலோ செம்புத் தகடு மற்றும் 98 கிராம் தங்கத்தால் முலாம் பூசப்பட்டு ரூ.5 லட்சம் மதிப்பில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தினரால் உபயமாக அளிக்கப்பட்டுள்ளது.
கொடிமரத்தின் கிழக்கில் அகிலாண்டேசுவரி உருவமும்,மேற்கில் விநாயகர், வடக்கில் துர்க்கை, தெற்கில் ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன் உருவமும் பதிக்கப்பட்டுள்ளது. கொடிமரத்தின் பிரம்மபாதம் 5 அடியும்,விஷ்ணுபாதம் 3 அடியும் அழகிய வேலைபாடுகளும் வடிவமைக்கபட்டுள்ளது.
இந்த கொடிமரத்தில் வரகுதானியம் நிரப்பப்பட்டு பொருத்தப்பட்டதாக தங்க கொடிமரத்தை செய்த மதுரை ஸ்தபதி ரா.தா.செல்வராஜ் தெரிவித்தார்.