பறக்கும்படையினரை கண்டதும் பணத்தை தவறவிட்டு சென்ற கட்சியினர்
By DIN | Published On : 11th April 2019 08:29 AM | Last Updated : 11th April 2019 08:29 AM | அ+அ அ- |

துறையூரில் பறக்கும் படையினரைக் கண்டதும் பணவிநியோகம் செய்த கட்சியினர் தப்பியோடினர். அவர்கள் தவறவிட்டுச் சென்ற ரூ.9,600 ரொக்கத்தை பறக்கும்படையினர் மீட்டு வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
துறையூர் குட்டக்கரை பகுதியில் அதிமுக நகரச் செயலர் செக்கர் ஜெயராமன் வீடு உள்ள பகுதியில் ஒருவர் பொதுமக்களுக்கு பணம் வழங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்பகுதியில் வட்டாட்சியர் ஞானவேல் தலைமையிலான பறக்கும் படையினர் ரோந்து சென்றதை கண்ட அங்கிருந்தவர்கள் பணத்தை தவற விட்டு தப்பியோடினர்.
இவர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதும், ரூ. 9,600 ரொக்கத்தை தவறவிட்டுச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அத்தொகையை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் ரொக்கத்தை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.