தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோயில் குட்டிக்குடி திருவிழா
By DIN | Published On : 12th April 2019 09:33 AM | Last Updated : 12th April 2019 09:33 AM | அ+அ அ- |

திருச்சி தென்னூர் அருள்மிகு உக்கிரமாகாளியம்மன் திருக்கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை குட்டிக்குடித்தல் நடைபெற்றது.
இதையொட்டி தென்னூர் பிடாரி மந்தையில் வியாழக்கிழமை அருள்மிகு உக்கிரமாகாளியம்மன் எழுந்தருளிய பின்னர், எல்லைக் காவல் தெய்வமாகிய ஸ்ரீ சந்தன கருப்பு சுவாமியின் குட்டி குடிக்கும் நிகழ்வு தொடங்கியது. இதையடுத்து பொதுமக்கள் சார்பில் வழங்கப்பட்ட ஆடுகளையும், காவல் நிலையம் சார்பில் வழங்கப்பட்ட ஆடுகளும் காவு கொடுக்கப்பட்டன.
இதேபோல், தென்னூர் பகுதி முழுவதும் பக்தர்களின் ஆடுகள் பலியிடப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டன.
வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராடுதல் மற்றும் அம்மன் வீதியுலா வருதலும், சனிக்கிழமை சுவாமி கோயிலுக்கு குடிபுகுதலும் நடைபெறும். ஏப்ரல் 14ஆம் தேதி விடையாற்றியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
ஸ்ரீ குழுந்தாளம்மன் கோயில்: உறையூர் வண்டிகாரத் தெருவிலுள்ள அருள்மிகு ஸ்ரீ குழுந்தாளம்மன் திருக்கோயிலில் வியாழக்கிழமை குட்டிக்குடித்தல் நடைபெற்றது.
இக்கோயிலில் ஏப்ரல் 9ஆம் தேதி காளிவட்டத்துடன் தொடங்கிய திருவிழாவில் புதன்கிழமை மாவிளக்கு பூஜை நடைபெற்றது. வியாழக்கிழமை குட்டிக்குடித்தல் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.