திருச்சி விமானநிலையத்தில் ரூ.26.55 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
By DIN | Published On : 04th August 2019 03:29 AM | Last Updated : 04th August 2019 03:29 AM | அ+அ அ- |

மலேசியாவிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.26.55 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம், நாணயங்களை சுங்கத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
கோலாலம்பூரிலிருந்து சனிக்கிழமை ஏர் ஏசியா விமானத்தில் திருச்சி வந்த பயணிகளின் உடைமைகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது 5 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை அதிகாரிகள் சோதனைக்குள்படுத்தினர். அதில், அவர்கள் குழுவாகச் செயல்பட்டு, மலேசியாவிலிருந்து உடைமைக்குள் மறைத்து தங்கத்தை கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், சென்னை முகமதுயாசின்(28), ஷாஜஹான்(25), ஜியாவுதீன்(24), பைசல் அமீன்(29), முகமது இடிரிஸ்(25) ஆகிய 5 பேரும் ரூ.26.55 லட்சம் மதிப்பிலான 750 கிராம் தங்கத்தை தங்க நாணயங்களாகவும், முழுமை பெறாத தங்கச் சங்கிலியாகவும் கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், 5 பேரையும் கைது செய்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...