வேட்டையாட நாட்டுத் துப்பாக்கி எடுத்துச் சென்றவர் கைது
By DIN | Published On : 04th August 2019 03:29 AM | Last Updated : 04th August 2019 03:29 AM | அ+அ அ- |

பச்சமலை அருகே வனவிலங்குகளை வேட்டையாட, நாட்டுத்துப்பாக்கி எடுத்துச் சென்றவரை வனத்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
பச்சமலை வண்ணாடு ஊராட்சி, பாளையம்
கிராமத்தைச் சேர்ந்த தங்கமலை மகன் ராஜூ(55). சனிக்கிழமை அதிகாலை வன விலங்குகளை வேட்டையாடக் கருதி, பழமலை வனக் காப்புக் காட்டுக்கு தன்னிடமிருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்துச் சென்றார்.
அப்போது அப்பகுதியில் துறையூர் வனச்சரகர் குணசேகரன் தலைமையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனக்குழுவினர், தொம்பக்கல் என்ற
பகுதியில் துப்பாக்கியுடன் சென்ற ராஜூ பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் ஆடிப்பெருக்கையொட்டி, முயல் உள்ளிட்ட கண்ணில் படும் வனவிலங்கை வேட்டையாட சென்றதும், அவரிடம் இருந்தது அரசு உரிமமில்லாத நாட்டுத் துப்பாக்கி என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, ராஜூவிடமிருந்து நாட்டுத்துப்பாக்கி, டார்ச்லைட், பால்ரஸ் குண்டுகள் வைக்கப்பட்ட குப்பிஆகியவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர், அவரைக் கைது செய்து வன அலுவலகம் அழைத்துச் சென்று விசாரித்தனர். மேலும், அவர் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...