கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா
By DIN | Published On : 28th August 2019 10:43 AM | Last Updated : 28th August 2019 10:43 AM | அ+அ அ- |

திருச்சியில் மரக்கன்று நடும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மரக்கன்றுகள் நடும் பணிகளில் ஈடுபட்டவர்கள், மாணவ, மாணவியர், ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டு விழா பிஷப்ஹீபர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, சான்றுகளை வழங்கிய ஆட்சியர் சு. சிவராசு மேலும் பேசுகையில்,
திருச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் தலா ஒரு மரக்கன்று நடவு செய்து அதை வளர்த்தாலே போதுமானது. அதிகளவிலான மரங்கள் வளர்க்க முடியும். ஏராளமான நீர் நிலைகள், காலியிடங்கள் மரம் நடவு செய்ய ஏற்றதாக உள்ளன. அவற்றில் மரக்கன்றுகளை நடவு செய்ய விரும்புவோர் தகவல் தெரிவித்தால் உரிய ஏற்பாடும் உதவியும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் என்றார்.
முதன்மை மாவட்ட நீதிபதி கே. முரளிசங்கர் பேசுகையில், சட்டப்பணிகள் ஆணைக்குழு சட்டம் சார்ந்த பணிகள் மட்டுமின்றி சமூகப்பணிகளும் ஆற்றி வருகிறது. அதன் நிர்வாகத் தலைவர் கோத்தாரி, சட்டப்பணிகள் குழு அனைத்தும் மரக்கன்றுகளை நடவு செய்வதில் கவனம் செலுத்தவேண்டும் என உத்தரவிட்டதைத் தொடர்ந்து மரக்கன்றுகள் நடவு செய்வதில், வழக்குரைஞர்கள் சங்கத்துடன் இணைந்து தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. அந்தவகையில் நீதிமன்ற வளாகமே பசுமையாக்கப்படும் வகையில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது என்றார்.
நிகழ்ச்சியில், மரக்கன்றுகள் நடும் பணிகளில் ஈடுபட்ட பிஷப்ஹீபர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவியர், அவர்களுக்கு உதவிய மூர்த்தி மருத்துவமனையின் நிறுவனர் மருத்துவர் பி.வி. மூர்த்தி, எஸ்.யு.எஸ். ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனர் எம். ஆசீர் ராஜநாயகம், சரஸ்வதி கபே, உணவக பங்குதாரர் பி. கௌரிசங்கர் உள்ளிட்டோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இதில், சட்டப்பணிகள் ஆணைக்குழு மாவட்ட செயலாளர் ஆர். நந்தினி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பி. விமலா, திருச்சி - தஞ்சை திருமண்டல பேராயர் (சிஎஸ்ஐ) டி. சந்திரசேகரன், பிஷப்ஹீபர் கல்லூரி முதல்வர் பால் தயாபரன், வழக்குரைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் நடராஜன், செயலாளர் ஆர். ராஜசேகர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.