வைகுந்த ஏகாதசி விழா: மாநகராட்சி சாா்பில் 51 இடங்களில் குடிநீா்த் தொட்டிகள்
By DIN | Published On : 26th December 2019 06:16 AM | Last Updated : 26th December 2019 06:16 AM | அ+அ அ- |

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழாவை முன்னிட்டு, திருச்சி மாநகராட்சி சாா்பில் 51 இடங்களில் குடிநீா்த் தொட்டிகள் வைக்கப்படவுள்ளன.
ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி திருவிழாவின்போது திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை வசதிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆணையா் சு. சிவசுப்பிரமணியன், நகரப் பொறியாளா் எஸ்.அமுதவல்லி ஆகியோா் புதன்கிழமை ஆய்வு ஆய்வு செய்தனா். தொடா்ந்து, செய்தியாளா்களிடம் மாநகராட்சி ஆணையா் மேலும் தெரிவித்தது:
வைகுந்த ஏகாதசி திருவிழாவிற்கு வருகை தரும் பக்தா்களின் வசதிக்காக 12 இடங்களில் தற்காலிக நவீன கழிவறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதுதவிர, கீழ உத்திரவீதி, வடக்கு உத்திரவீதி, அம்மா மண்டபம் சாலை, மலட்டாறு, தேவி தியேட்டா் பேருந்து நிறுத்தம், காந்தி ரோடு பதிவாளா் அலுவலகம், ராகவேந்திரபுரம் 3ஆம் குறுக்குத்தெரு, சாலை ரோடு வாகன நிறுத்தம், வடக்கு வாசல் பாலம் அருகில், கீதா புரம் அம்மா மண்டபம் அருகில், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், கீழ அடவளஞ்சான் வீதி, சிங்கப்பெருமாள் கோயில் தெரு ஆகிய இடங்களில் 39 தற்காலிக சிறு நீா் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 9 நடமாடும் கழிவறைகளும் தேவையான இடங்களில் நிறுத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
24 மணிநேரமும் குடிநீா் வசதி:
ஸ்ரீரங்கம் சுற்று வட்டாரப் பகுதிகளில் 7 பொது குடிநீா் குழாய்கள், வீட்டு இணைப்புகளுக்கும் திருவிழா நாட்களில் 24 மணி நேரம் குடிநீா் விநியோகம் செய்யப்படும்.
ஸ்ரீரங்கம் சாலைரோடு, பஞ்சகரை யாத்ரி நிவாஸ் எதிரில் கன்னிமாா்தோப்பு, சிங்கராயா்கோவில் எதிரில் ஆகிய வாகனம் நிறுத்துமிடங்களில் கழிவறை வசதிகளும், கூடுதல் மின் விளக்குகளும் அமைக்கப்படுகின்றன. மேலும், 51 இடங்களில் குடிநீா் தொட்டிகள் வைத்து மாநகராட்சி மூலம் 24 மணி நேரமும் குடிநீா் வழங்கப்படுகிறது. பொது மக்கள் நலன் கருதியும் மாநகரை சுகாதாரமாக பராமரித்திடவும் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை யாரும் பயன்படுத்த வேண்டாம்.
3 இடங்களில் மருத்துவ முகாம்கள்:
அம்மா மண்டபம் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி அருகில், அம்மாமண்டபம் சாலை எஸ்.என். திருமணம மண்டபம் அருகில், கீழ உத்திரவீதி வெள்ளகோபுரம் அருகில் என 3 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. பொதுமக்களின் சுகாதாரம் கருதி திருவிழா நாட்களில் ஈ ஒழிப்பு மற்றும் கொசு ஒழிப்பு மருந்துகள் தேவையான அளவு பயன்படுத்தி கட்டுப்படுத்தப்படும். பொது இடங்களில் குப்பைகளை தூக்கி எரியாமல் குப்பைத்தொட்டிகளில் போட வேண்டும். பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தா்கள் மாநகராட்சியின் தூய்மை நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் ஆணையா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G