வரி செலுத்தாத 147 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு
By DIN | Published On : 10th February 2019 03:35 AM | Last Updated : 10th February 2019 03:35 AM | அ+அ அ- |

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் முறையாக வரி செலுத்தாத 147 வீடுகளின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : திருச்சி மாநகராட்சி பகுதிகளில் முறையாக வரிகள் செலுத்தாத வீடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜனவரி 2ஆம் தேதிமுதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை மொத்தம் 147 வீடுகளில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மாநகராட்சியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், காலிமனை வரி, தொழில் வரி மற்றும் மாநகராட்சி கடை வாடகை, புதைவடிகால் சேவைக்கட்டணம் ஆகியவைகளின் நிலுவை மற்றும் நடப்பு வரிஇனங்களை வசூலிக்க 01.02.2019 முதல் 15.02.2019 வரை தீவிர வரி வசூல் முகாம் நடைபெற்றுவருகிறது. வரிவிதிப்புதாரர்கள் மாநகராட்சியில் உள்ள 27 வசூல் மையங்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும் (விடுமுறை நாள்கள் உள்பட) வரிகளை செலுத்துவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இணையதளம் மூலமும் வரிகளை செலுத்தலாம். பிப்ரவரி 15 -க்குள் வரிகளைச் செலுத்தாமல் நிலுவை வைத்திருபவர்களின் பெயர், முகவரி மற்றும் நிறுவனத்தினரின் பெயர் ஆகியவைகளை திருச்சி மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடுவதோடு பொது இடங்களிலும் பெயர் பட்டியல் வெளியிடப்படும். வரிகள் செலுத்தாத வீடுகள், நிறுவனங்கள் உடனடியாக வரி செலுத்தி குடிநீர் இணைப்புகள் மற்றும் புதைவடிகால் இணைப்புகள் துண்டிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.