குடிநீர்க் கோரி சாலை மறியல்
By DIN | Published On : 12th February 2019 08:59 AM | Last Updated : 12th February 2019 08:59 AM | அ+அ அ- |

துறையூரில் பழைய சிலோன் அலுவலகப் பகுதி பேருந்து நிறுத்தம் அருகே சீராக குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் திங்கள் கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடந்த சில மாதங்களாக துறையூர் நகராட்சி எல்லைக்குள்பட்ட வார்டுகளில் காவிரிக் கூட்டு குடிநீர் வாரத்துக்கு ஒரு முறைதான் வழங்கப்படுகிறது. சில நேரங்களில் குழாய் உடைப்பு என்று கூறி அதனை சீர் செய்யும் வரை குடிநீர் வழங்கப்படாது. இந்நிலையில், குடிநீர் தட்டுப்பாட்டால் கடும் சிரமத்துக்குள்ளாவதாகக் கூறி 6,7,8,9 வார்டைச் சேர்ந்த பொதுமக்கள் திங்கள்கிழமை பெரம்பலூர் சாலையில் பழைய சிலோன் அலுவலகம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தமிடத்தில் சாலை மறியல் செய்தனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்த நகராட்சி சார்பில் யாரும் வரவில்லை. இந்நிலையில், துறையூர் காவல் துறை உதவி ஆய்வாளர் செல்லப்பா தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மறியல் நடத்தியவர்களுடன் பேசினர். இதனையடுத்து மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.