மாற்றுத் திறனாளிகள் 172 பேருக்கு மாதாந்திர உதவித் தொகைக்கு ஆணை: ஆட்சியர் வழங்கினார்
By DIN | Published On : 12th February 2019 09:05 AM | Last Updated : 12th February 2019 09:05 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 172 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ. 1000 பெறும் வகையிலான உதவித் தொகைக்கான ஆணையை ஆட்சியர் கு.ராசாமணி வழங்கினார்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 9 பேருக்கு தலா ரூ.2,460 மதிப்பில் காதொலிக் கருவி, 4 பேருக்கு தலா ரூ.7,200 மதிப்பிலான உருப்பெருக்கி வழங்கப்பட்டது. மேலும், திருச்சி கிழக்கு வட்டத்தைச் சேர்ந்த 26 பேர், மேற்கு வட்டத்தைச் சேர்ந்த 28 பேர், ஸ்ரீரங்கம் வட்டத்தில் 45 பேர், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் 40 பேர், முசிறி வட்டத்தில் 33 பேர் என மொத்தம் 172 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்குவதற்கான உதவித் தொகை ஆணைகளை ஆட்சியர் வழங்கினார்.
நோயால் பாதிக்கப்பட்ட 8 பேருக்கு மாதந்தோறும் ரூ. 1000 உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டன. 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் மதிப்பில் சிறுதொழில் தொடங்குவதற்கான வங்கிக் கடன் மானியம் வழங்கப்பட்டது.
ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து திருவெறும்பூரைச் சேர்ந்த இளஞ்சியம் என்ற மாற்றுத்திறனாளிக்கு வாழ்வாதார நிதியாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.
இதேபோல, மணப்பாறை வட்டத்தைச் சேர்ந்த முனியாண்டிக்கு ரூ.5 ஆயிரம், தொட்டியம் வட்டத்தைச் சேர்ந்த இருவருக்கு வாழ்வாதார நிதியாக தலா ரூ.2,500 வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.3.23 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
இக் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளுடன் கூடிய 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு அந்தந்த துறை அலுவலர்களிடம் நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது.