திருச்சி -காரைக்கால், விழுப்புரம் - கடலூர் ரயில் வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணி நிகழாண்டு இறுதிக்குள் நிறைவடையும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.கே. குல்ஸ்ரஷ்தா தெரிவித்தார்.
திருவாரூர் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை, 150-ஆவது சரக்குப் பெட்டகத்தை தொடங்கி வைத்து, பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: காரைக்கால் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் 150-ஆவது சரக்கு பெட்டக ரயில் பயணத்தை தொடங்கி வைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இனி வரும் காலங்களில் அதிகளவில் நிலக்கரி சரக்கு ரயில்கள் மூலம் ஏற்றி கொண்டு செல்லப்படும். அதன்மூலம், ரயில்வே துறைக்கு அதிக வருவாய் கிடைக்கும். திருச்சி - காரைக்கால், விழுப்புரம் - கடலூர் மின்மயமாக்குதல் பணிகள், நிகழாண்டு இறுதிக்குள் நிறைவடையும். இதேபோல், திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை பணிகள் நிகழாண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடையும். அந்த மார்க்கத்தில் ரயில்கள் இயக்குவது குறித்து ரயில்வே அமைச்சகம் தான் முடிவு செய்ய வேண்டும்.
பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து திருவாரூரில் இருந்து திருச்சிக்கு புதிய பயணிகள் ரயில்கள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார் ஆர்.கே. குல்ஸ்ரஷ்தா.
அப்போது, காரைக்கால் துறைமுக தலைமைச் செயல் அலுவலர் கே. முரளிதரன், திருச்சி மண்டல ரயில்வே துணை மேலாளர்
உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சரக்குகள் கையாள்வதில் நவீன தொழில்நுட்பம்: காரைக்கால் துறைமுகத்தில் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் சரக்குகள் கையாளப்பட்டு வருகின்றன.
இந்த நவீன தொழில்நுட்பத்தை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடந்த அக்டோபரில் தொடங்கி வைத்தார். இதன்மூலம், காரைக்கால் துறைமுகத்தில் ஒரு நாளில் 40 ஆயிரம் மெட்ரிக் டன் வரை சரக்குகள் கையாளப்படுகின்றன. இந்த முறையை பயன்படுத்தி இதுவரை 149 சரக்கு பெட்டகங்கள் ரயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. 150-ஆவது சரக்கு பெட்டகமானது திருவாரூர் ரயில் நிலையம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது என காரைக்கால் துறைமுக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.