11 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு: பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

பிளாஸ்டிக் தடை உத்தரவால் தமிழகம் முழுவதும் 11லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக

பிளாஸ்டிக் தடை உத்தரவால் தமிழகம் முழுவதும் 11லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து திருச்சி செய்தியாளர்களிடம் சங்கத்தின் தலைவர் தி.முத்துமாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் வியாழக்கிழமை கூறியது:   தமிழக அரசு  கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்துள்ளது.  ஆனால், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாதது பிளாஸ்டிக் தொழில் என்று கடந்த 4.6.2018 இல் தெரிவித்துள்ளது. 6 மாதத்துக்கு முன்பு பிளாஸ்டிக் தொழிலால் எந்தக் கேடும் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதே பிளாஸ்டிக் தொழிலுக்கு தடை விதித்திருப்பது குறு,சிறு தொழில்கள் செய்யும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை நசுக்குவது போல் உள்ளது.
கடலைமிட்டாய், முறுக்கு, சிப்ஸ் போன்றவைகள் பேக்கிங் செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிகிற்கு தடை செய்துள்ள அரசு,  கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரித்து பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்படும் பொருள்களுக்கு தடை இல்லை என்கிறது. பிளாஸ்டிக் பயன்படுத்தினால் புற்றுநோய் வரும் எனக் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பிளாஸ்டிக் என்பது சுற்றுச்சூழலுக்கும், உடல் நலத்துக்கும் எந்த வகையிலும் கேடு விளைவிக்காதது என போதுமான விழிப்புணர்வு செய்யப்படவில்லை. இதனால் பல்வேறு வதந்திகள் பரப்பட்டு வருகிறது. எந்த பிளாஸ்டிக்கையும் மறுசுழற்சி செய்ய முடியும்.திருச்சி மாவட்டத்தில் மட்டும் ஒரு மாதத்துக்கு 400 டன் அளவில் பிளாஸ்டிக்குகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
நகர வீதிகளில் போடப்படும் பிளாஸ்டிக் சாலைகள் 20 ஆண்டுகள் பழுதாகாமல் தரமானவையாக இருக்கின்றன என்பது நிரூபணமாகியுள்ளது. இந்தியாவில் 17 மாநிலங்களில் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்கப்பட்டு பின்னர் அது நீர்த்துப்போய் விட்டது. தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அறிவிப்பால் 11லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வணிக நிறுவனங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.
பிளாஸ்டிக் தொழில் செய்வோர்களால் ஆண்டுக்கு ரூ.2500 கோடி வரி வருவாயாக தமிழகத்துக்கு கிடைக்கிறது. இத்தடை அறிவிப்பால் அரசுக்கு வருவாய் இழப்புத்தான் ஏற்பட்டுள்ளது. திருச்சியிலும்,புதுக்கோட்டையிலும் மட்டும் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் சுமார் 200க்கும் மேற்பட்டவை மூடப்பட்டுள்ளன. இதனை கண்டிக்கு வகையில் விரைவில் போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com